Wednesday 9 July 2008

ஆடி மாச மூட நம்பிக்கை

கர்ப்பிணிகளை ஆட்டி வைக்கும் ஆடி!
முகூர்த்தங்கள் நிரப்பிக் காத்திருக்கும் வைகாசி, அடைமழை தந்து ஆசீர்வதிக்கும் ஐப்பசி, முப்பது நாட்களும் விசேஷமாய்க் கழியும் மார்கழி.. என ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒரு புகழ் சுமக்க, அவற்றுள் 'ஆடி' மட்டும் சவலைப் பிள்ளை!
ஆம். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது'களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது.. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்..' என்ற நம்பிக்கை!
'இப்போதெல்லாம் எங்கள் ஏரியாவில் ஆடியில் பிறக்க வேண்டிய குழந்தையை ஆனியிலேயே அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுகிறார்கள்' என்று சிவகங்கை வாசகி ஒருவர் தகவல் தர, அதிர்ந்து போய் அங்கு சென்று விசாரித்தோம்.
''ஆடியில குழந்தை பொறந்தா குடும்பத்துக்கு ஆகாதுனு பெரியவங்க சொல்வாங்க.. அதனாலதான்..'' என்று தயங்கியபடியே பேச ஆரம்பித்த ஈஸ்வரிக்கு ஆடி முதல் வாரத்தில் பிரசவ தேதி குறிக்கப்பட்டிருக்க, ஆனி இறுதி வாரத்திலேயே சிசேரியன் செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
''வர்றவங்க, போறவங்கள்லாம், 'அடக் கடவுளே.. ஆடியிலயா பிரசவம்..?!' னு கேட்கக் கேட்க, எனக்கு ரொம்ப குழப்பமாகிடுச்சு. எனக்கு இது மூணாவது குழந்தைங்கிறதால 'உடல் பலவீனமா இருக்கு. ஆபரேஷன்தான் பண்ணணும்'னு டாக்டர் ஏற்கெனவே சொல்லியிருந்தாங்க. அதனால, மூணு நாள் முன்னயே சிசேரியன் பண்ணப் போறோம்'' என்றவர் தொடர்ந்து,
''மத்தவங்களுக்காகவாவது இதையெல்லாம் பின்பற்ற வேண்டியிருக்கு. இல்லைனா பின்னாடி ஏதாவது சின்ன பிரச்னைனாக்கூட, 'ஆடியில பொறந்தது வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடுச்சு..'னு எம்புள்ளையத்தானே குத்தம் சொல்வாங்க..'' என்றார்!
புகைப்படம் மறுத்து பேச ஆரம்பித்த கவிதாவுக்கு ஆடி பற்றிய இந்த நம்பிக்கை தந்தது ஆயுளுக்கும் அழியாத சோகம்..
''நான் கர்ப்பமாயிருக்கேன்னு தெரிஞ்சப்போ, ஆடியில பிரசவ தேதி வர, அதனாலயே என்னை அபார்ஷன் பண்ணச் சொல்லிட்டாங்க என் மாமியார். நான் எவ்வளவோ சொல்லியும் என் கணவர் உட்பட யாருமே கேக்கல. அது எனக்கு தலைக் குழந்தை. அந்தப் பாவம்தானோ என்னவோ.. இதோட நாலு வருஷம் ஆச்சு. அதுக்குப் பெறகு என் வயித்துல குழந்தை தங்கல..'' என்று அதற்கு மேல் தொடர முடியாமல் தளர்ந்தார் அவர்.
இந்த நம்பிக்கை பற்றிக் கேட்டாலே கோபமாகிறார் சிவகங்கையைச் சேர்ந்த முருகன்.
''என் மனைவி ரெண்டாவது முறையா கர்ப்பமானப்போ, எங்களையும் 'ஆடியா..?'னு எல்லாரும் பயமுறுத்துனாங்க. ஆனா நாங்க அதையெல்லாம் சட்டையே செய்யல. என் பையன் ஆடியிலதான் பொறந்தான்.
அவன் பிறந்ததை விசாரிக்க வந்தவங்க பலரும் 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைச்சிடுமே..'னும், 'ஆடியில பெறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது'னும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினாங்க. ஆனா, ஆண்டவன் அருளால எங்களுக்கு எந்தப் பிரச்னையும் எற்படல. ஆண் ஒண்ணு, பொண் ஒண்ணுனு அழகா, ஆனந்தமா இருக்கு எங்க குடும்பம்'' என்று அவர் சொல்ல.. அதை சந்தோஷமாக ஆமோதித்தார் அவர் மனைவி விஜயலஷ்மி!
''முன்கூட்டி சிசேரியன் செய்யச் சொல்லி வருகிற கர்ப்பிணிகளை எப்படித்தான் டீல் பண்ணுகிறார்கள் மருத்துவர்கள்?'' என்கிற கேள்வியுடன் சிவகங்கையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான டாக்டர் சொர்ணமீனாவை சந்தித்தோம்.
''ஆடியில பிரசவ தேதி வந்தாலே அந்த கர்ப்பிணி பெண்ணை விடவும் நாங்க-தான் ரொம்ப சிரமப்பட்டுப் போயிருவோம்'' என்று தொடங்கிய டாக்டர் குமுறித் தீர்த்தார்..
''ஆடி முதல் வாரத்துல 'ட்யூ டேட்' இருக்கறவங்க, ஆனி 28-ம் தேதியே, 'எப்படியாச்சும் குழந்தை பிறக்க வச்சுருங்க டாக்டரம்மா..'னு வந்து நிப்பாங்க. நான் திருப்பி அனுப்பிடுவேன். ஆனா, அவங்க வேற எங்கியாவது போய் சிசேரியன் பண்ணிக்கத்தான் செய்றாங்க. என்ன செய்ய?'' என்று வருந்தியவர், அடுத்துச் சொன்ன செய்தியில் 'ஆடி'த்தான் போனோம்.
''ஒருமுறை ஆடி 32 -ம் தேதி ராத்திரி ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்திருக்கு. ஒரு ராத்திரி வலியை அடக்கிட்டா(?!) காலையில ஆஸ்பத்திரி போய்க் குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சவ, பல்லைக் கடிச்சிக்கிட்டு இருந்திருக்குறா. அதுல நீர் வத்தி, ரத்தப்போக்கு அதிகமாகி.. கடைசியில அவ பிழைச்சதே தெய்வச் செயல்னு ஆகிப் போச்சு!'' என்று சொல்லும்போதே அவரோடு சேர்ந்து நமக்கும் நடுங்குகிறது. தொடர்ந்த டாக்டர்..
''சிசேரியன்ங்கிறது தாய், சேய்னு ரெண்டு உயிருக்கும் சேதம் ஏற்பட்டுடக் கூடாதுங்கிற அக்கறையில கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருத்துவ முறை. அதை இப்படி மூடநம்பிக்கைக்கான கருவியா ஆக்குறது மருத்துவ தொழிலுக்கு செய்ற துரோகம். தாயோட கர்ப்பத்துல 38 வாரங்கள் வளர்ந்தாத்தான் ஒரு கரு முழுமையான வளர்ச்சியடையும். இப்படி முன்கூட்டியே குழந்தையை வெளியில எடுத்தா மூச்சு விடறதுல பிரச்சனை, தொற்று நோய்னு குழந்தைக்கு பல சிக்கல்கள் ஏற்படும்'' என்று பாரத்துடன் முடித்தார்.
இந்த ஆடி நம்பிக்கை பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
****************************************************************************
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன், சென்னை:
''இதெல்லாம் மக்களால் உண்டாக்கப்பட்ட மூடநம்பிக்கைதான். சூரியன் கடகத்துக்கு இடம்பெயரும் மாதம் ஆடி. கடகம், ஆதிபராசக்தியின் வீடு. எனவே சூரியனும் சக்தியும் சேரும் இம்மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் சுபிட்சமாக இருப்பார்கள். நிர்வாகத் திறமையில் தேர்ந்து விளங்குவார்கள்..''
பி.என். பரசுராமன், ஆன்மிக நிபுணர், சென்னை:
''கந்தரலங்காரத்தில் வருகிற 'நாளென் செயும் வினைதான் என் செயும்..' என்கிற பாடல் என்ன சொல்கிறது தெரியுமா? 'எந்த ஒரு செயலையும் செய்ய நல்ல நாளையும் கெட்ட நாளையும் பார்க்க வேண்டாம்.. கோள்கள் ஏதேனும் செய்யுமோ என்று அஞ்சவும் வேண்டாம். இறைவனுடைய வல்லமையின் முன் அவை அனைத்துமே செயலற்றவை' என்கிறது.
'ஈசனின் திருவடியை வழிபடும் அடியவர்களுக்கு ஒன்பது கோள்களினாலும் ஒரு துன்பமும் இல்லை' என்கிறார் திருஞான சம்பந்தர். நாளையும் நேரத்தையும் பார்த்து பயப்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களை செய்வது வீணானது.''
*******************************************************************************