Wednesday 8 October 2008

டீன்ஏஜ் பற்றி மனநல மருத்துவர் ஷாலினி இன் குமுதம்

டீன்ஏஜ். யாரும் சரியாக புரிந்துகொள்ள முடியாத வயசு. இந்த வயதில் வரும் முக்கியமான பிரச்னைகள் என்ன, அவற்றைச் சமாளிப்பது எப்படி என்று சொல்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
படிப்பில் வீக்:
``அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னன்னே தெரியல, வர வர படிப்புல ரொம்ப வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை'' என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், ``எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது'' என்கிறார்கள். அல்லது, ``புக்கைத் திறந்தாலே, பகல் கனவா வருது'' என்கிறார்கள். பரிசோதித்துப் பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மனப்பாடம் செய்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த `டப்பா அடிக்கும்' பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய கிளாஸ் போகப் போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துகொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால், இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது.
புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளைத் தெரிந்துகொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுவார்கள். இப்படிப் படிக்க அவர்களை பழக்கப்படுத்தவேண்டும்.
ஓவர் டென்ஷன்:
டீன்ஏஜ்காரர்கள் பற்றிய அடுத்த புகார், இந்த முன்கோபம். அதுவரை சொல் பேச்சைக் கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதைத் தொட்ட உடனே, ``எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்''என்று பெற்றோரையே எதிர்த்துப் பேசிவிடுகிறார்கள்.
இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்தத்தில் எக்கச்சக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூட் அவுட் என்று இளரத்தம் எப்போதுமே ஒரு சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். இதைப் புரிந்துகொண்டு, பெரிசுகள் நாம் மிகப் பக்குவமாய், ஹாஸ்யமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களைக் கையாண்டால் தான் ஹார்மோன்களின்ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள்.
ஓவர் கூச்சம்:
``விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை; கடைக்குப் போனால், எல்லாரும் பார்க்குறாங்க; நான் இந்தப் பையைத் தூக்கிட்டு வந்தா சிரிப்பாங்க; மத்தவங்க முன்னாடி என்னைப் பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது...'' இப்படியாக, டீன்ஏஜ் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வைப் பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது? இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசிப் போகச் செய்கிறது. போகப் போக இந்தக் கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, ``ஆமா, நான் இப்படித்தான், எனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை'' என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுயாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன. அதுவரை இந்த வெட்கத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள். சகாக்களின் சம்மதம்:
டீன்ஏஜ் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. அவர்களைப் போலவே இருக்க விரும்புகிறார்கள். இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அணுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதைப் போலவே தானும் இருந்தால்தான் தன்னை `செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்' என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். இளையவர்களின் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் மற்றவர்களைவிட இந்த மாதிரி சமவயது நண்பர்களிடமிருந்து அதிக விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்படியாகத்தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்க ஒரே வழி, உங்கள் குழந்தையின் சகாக்களை பரிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாகக் கண்காணித்து தீயவை உள்ளே நுழையாமல் கவனம் செலுத்துங்கள்.
முதல் காதல்:
உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இதுதான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும்படியாகத்தான் இயற்கைமனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதறாதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் இருக்கின்றன. அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி.ஆனால், இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரைப் பிடியுங்கள். அல்லது ஒரு கவுன்சிலரை அணுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களைப் பற்றி விளையாட்டாகப் பேசி புரியவைத்தாலே. `ஓகோ, இது இந்த வயதில்எல்லோருக்கும் ஏற்படுகின்ற மிகச் சாதாரண ஒரு உணர்ச்சி தான் என்பதை புது இளைஞி புரிந்துகொள்வாள்.
மூட் அவுட்:
டீன்ஏஜ் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோபம், திடீர் அழுகை, திடீர், `என்னைக் கண்டாலேயாருக்கும் பிடிக்கல!' மாதிரியான உணர்ச்சிவெடிப்புகள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்தத்தில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருநிலைப்படாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள், ``என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!'' என்று புலம்பி அழுவதும், ஆண்கள் ``என்னைக் கவனிக்கிறதே இல்லை'' என்று எரிந்து விழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, மூளையில் ஏற்படும் ரசாயன ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரிசமமாய் கத்தி சண்டையைப் பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால்தான் குடும்ப நிம்மதியைக் காப்பாற்ற முடியும்.
என்ன இருந்தாலும் டீன்ஏஜ் பருவம் என்பது காட்டாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்தப் பதப்படுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அணைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாராவது தேவை. வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும்.சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டிராமல் நம்மைப் போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும். டீன் ஏஜ் பருவப் பிரச்னைகளைத் தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்..

கார்த்தி ப.சிதம்பரம் இன் குமுதம்

படபடவென, அதே சமயம் தன்னம்பிக்கை துளிர்விடப் பேசுகிறார் கார்த்தி ப.சிதம்பரம். மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரத்தின் மகன். அப்பாவோடு அரசியல் மேடைகளில் தோன்றினாலும், அவ்வப்போது இன்றைய கல்வி முறை பற்றி மேடைகளில் பதிவு செய்யவும் தவறுவதில்லை. குறிப்பாக, குழந்தைக் கல்வி முறை பற்றிய அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தேவை என்கிறார்.
``நாம் குழந்தைகளை நிறைய கட்டுப்படுத்துறோம். அதுவே தப்பு. குழந்தைகளை அவங்க போக்கிலே விட்டுத் தான் வளர்க்கணும்.
இது போட்டி உலகம்தான். நான் மறுக்கல. பெத்தவங்க தங்களால் சாதிக்க முடியாததை சந்ததிகள் சாதிக்கணும்னு அவங்களை வற்புறுத்தறாங்க. இது குழந்தைகளுக்கு பெரிய அழுத்தமா மாறுது.
அடுத்து, சக மாணவர்களோடு குழந்தைகளை ஒப்பிடுதல். இது மிகவும் தவறு. ஒப்பிடுவதால் குழந்தையின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் ஆபத்துகளே அதிகம்!'' என்று ஒருவித எச்சரிக்கையுடன் சொல்லும் கார்த்தி, வீட்டுப் பாடம் எழுதச் சொல்லி குழந்தைகளை கட்டாயப்படுத்துவதையும் கடுமையாக எதிர்க்கிறார்.
``ஒரு குழந்தை ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை பள்ளிக்கூடத்தில் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே இருக்கிறது. அதன்பின்னர், எதற்கு வீட்டுப் பாடம்? வீட்டிற்கு வந்த பின்னரும் அதையே தொடர வேண்டிய அவசியம் என்ன? ஸ்கூலில் படிக்கவேண்டும். வீட்டில் பெற்றோர்களுடனும் மற்ற உறவினர்களுடனும் கலந்திருக்க வேண்டும். வீட்டிலும் படித்துக்கொண்டே இருந்தால் எப்படி? நம்ம ஊர் படிப்பில் எல்லாமே பரீட்சையை வைத்துத் தான் முடிவு செய்கிறார்கள். அதனால் குழந்தையின் இயல்பு நிலை மாறி, தூக்கத்திலும் `டீச்சர்' திட்டுவாங்களே என்கிற மனஉளைச்சலுக்குத் தள்ளப்படும். வருடம் முழுவதும் படித்துவிட்டு, முடிவில் ஒரே ஒருநாள் எழுதும் பரீட்சையின் மூலம் மட்டும் குழந்தையின் ஆளுமைத் திறனை எப்படி கணிக்க முடியும்? பரீட்சையின் போது, சொந்தமாக எந்தக் கருத்தையும் எழுதிவிட முடியாது. புத்தகத்தில் இல்லாததை எப்படி எழுதலாம் எனக் கேட்டு, மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இந்தப் பிரச்னை இல்லை.
நான் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்தபோது, இயற்பியல் பரீட்சையில் ஒரு கேள்வி. `குளிர்சாதனப் பெட்டி இல்லாத நாட்டில் மக்கள் `காமா கதிர்களை'க் கொண்டு எப்படி உணவைப் பதப்படுத்துவார்கள்?' `குளிர்சாதனப் பெட்டியைப் பற்றியே தெரியாத நாட்டில் `காமா கதிர்கள்' பற்றித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை!' என்று பதில் எழுதினேன். புத்தகத்தில் இப்படி ஒரு விடை கிடையாது. நானாகவே எழுதினேன். ஆனால் அதற்கு மதிப்பெண் கொடுத்து என்னைப் பாராட்டினார்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்.
படிப்பது, பரீட்சை எழுதுவதற்கு மட்டுமே என்கிற நமது கல்வி முறை மாறவேண்டும். எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோமோ, அதைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. `நான் சொல்வதைப் படித்தால் போதும்?' என்று ஓங்கி அடித்து உட்கார வைத்துவிடுகிறார்கள். அப்புறம் எப்படிக் கேள்விகள் பிறக்கும்?
வளர்ந்த நாடுகளில் குழந்தைகள், மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் எதையும் திணித்துவிட முடியாது. ஏன்? எதற்கு? என்கிற கேள்விகள் இல்லாமல் அங்கே ஒரு வகுப்பு கூட நிறைவடையாது!'' என சற்றே குரல் உயர்த்திச் சொல்லும் கார்த்தி, உடற்கல்வி பற்றியும் நிறையப் பேசுகிறார்.
``சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. அப்படியே விளையாடினாலும் பெற்றோரும், ஆசிரியர்களும் தடை போடறாங்க. குடும்பமாக எங்காவது போய் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் பழக்கம் இன்னிக்கு இல்ல. ஆனா குடும்பமா ஒண்ணாச் சேர்ந்து டி.வி. பார்க்கறாங்க. ஹோட்டலுக்குப் போறாங்க. விளையாடும்போது உடலும், மனமும் இலகுவடையும். சோர்வு விலகும். அடுத்து என்ன செய்யலாம்ங்கிற உத்வேகம் உண்டாகும். குழந்தைகளின் கல்விக்கு விளையாட்டுதானே அடிப்படை!'' என்கிறார்.
தந்தையின் கருத்துக்களை ஆதரிப்பதுபோல் அவரது கரங்களைப் பிடித்துக் குலுக்கும் மூன்றாவது படிக்கும் மகள் அதிதி நளினி சிதம்பரத்தை வாஞ்சையோடு அணைத்துக்கொள்கிறார் கார்த்தி!.