Monday 11 August 2008

எனக்குப் பிடித்த கதைகள் - 95 - வெறுப்பும் அன்பும்- சாந்தனின் 'முளைகள் '

பாவண்ணன்

அவர் பெயர் சலபதிராவ். எங்கள் துறையில் உட்கோட்ட அதிகாரியாக வேலை செய்தவர். எண்பதுகளில் சில மாதங்கள் நான் அவரிடம் இளநிலைப் பொறியாளராக வேலை செய்தேன். கசங்கிய சட்டையைத்தான் அவர் எப்போதும் போட்டிருப்பார். எந்த நேரத்திலும் சிடுசிடு என்றுதான் இருப்பார். மேலும் இரண்டுவார்த்தைகள் பேசினால் போதும், அடிக்கத் தொடங்கிவிடுவார் என்பதைப்போல சதாநேரமும் கோபத்துடன்தான் காணப்படுவார். பசியெடுத்தால் வழியில் எந்த விடுதியிலும் வண்டியை நிறுத்திவிட்டுச் சாப்பிடத் தயங்காதவர். பண விஷயத்தில் யாரையும் நம்பாதவர். எல்லாரும் திருடர்கள் என்கிற எண்ணம் அவர் மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. வேலைக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே சென்றுதான் வாங்கிவருவார். சற்றே அசந்தாலும் தன்னையும் துறையையும் எல்லாரும் ஏமாற்றித் தண்ணீர் குடித்துவிடுவார்கள் என்று நினைப்பவர். ஆனால் எந்த வேலையை எடுத்தாலும் முடிக்காமல் உறங்கமாட்டார். உறக்கம், உணவு எல்லாமே அவருக்கு அடுத்தபடிதான். பல நாள்கள் இரவு நெடுநேரம் கண்விழித்துப் பழுதான சாதனங்களைச் சரிப்படுத்திக்கொண்டிருப்பார். அல்லது அச்சாதனத்தின் இயக்கப்பாதையை விவரிக்கும் தகவலை விவரிக்கும் படத்தை விரித்துவைத்துக்கொண்டு ஆராய்ந்தபடியிருப்பார்.

நுண்ணலைக் கோபுரங்கள் வழியாகத் தொலைபேசித் தகவல்கள் பரிமாற்றம் அறிமுகமான நேரம் அது. முன்னுாறு அடி உயரமுள்ள அக்கோபுரத்தில் அவர் ஏறும் வேகம் ஆச்சரியமளிக்கும். தனக்கிருக்கும் நீரழிவுநோயைப்பற்றிச் சிறிதும் கவலைப்பட்டதே இல்லை. அக்கோபுரத்துடன் அவருக்கு இசைவான ஓர் உறவு உருவாகியிருந்தது. வேலை இல்லாத நேரங்களில் கூட அக்கோபுரத்தின் உச்சியில் ஏறி ஆண்டெனாத் தளத்தில் நின்றபடி வானத்தையும் மேகத்தையும் வேடிக்கை பார்த்தபடி வெகுநேரம் நின்றிருப்பார். கோபுரத்தில் ஏறி இறங்குவது என்பது அவரைப்பொறுத்தவரை சாதாரணமான விஷயம். ஏதோ காலைநடைபோல, கடைத்தெருவுக்கு ஓட்டமாக ஓடிச்சென்று திரும்புவதைப்போல ஏறி இறங்குவார் அவர்.

அவர் முகாமில் சென்று இணைந்ததும் 'உங்களுக்குக் கோபுரத்தில் ஏறத் தெரியுமா ? ' என்பதுதான் என்னைப் பார்த்து அவர் கேட்ட கேள்வி. அந்தத் தொனி, அதில் இருந்த அதிகாரம், எரிச்சலுடன் பேசிய விதம், அவருடைய அழுக்குக் கோலம் எல்லாம் சேர்ந்து முதல் பார்வையிலேயே என்னை மனம் சோர்வுறச் செய்தன. அந்தத் தருணத்தில் இப்படி ஒரு கேள்வி வந்து விழுந்ததும் அவரைப் பிடிக்காமலேயே போனது. உள்ளூரப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவரிடம் வேலை செய்யவேண்டியது என்னுடைய கடமை என்கிற நினைவு ஆழமாகப் பதிந்தே இருந்தது. விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு 'கோபுரத்தில் ஏறிப் பழக்கமில்லை ' என்று பதில் சொன்னேன். என் பதிலை எதிர்பார்த்ததைப்போல இருந்தது அவர் முகம்போன போக்கு. ஏசின்ன வயசில மரம் ஏறியிருக்கீங்களா ? ' என்று உடனடியாகக் கேட்டார் அவர். நான் இல்லை என்று தலையசைத்தேன். 'அதெல்லாம் சுலபம்தான். நான் கத்துக் கொடுக்கறேன், வாங்க ' என்றபடி என்னை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த கோபுரத்தின் பக்கம் சென்றார்.

எனக்குக் கால்கள் உதறத் தொடங்கிவிட்டன. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லித் தப்பிக்க எதைஎதையோ மனம் எண்ணத் தொடங்கியது. ஆனால் எதுவும் வார்த்தைகளாக வரவில்லை. என்னை நானே நொந்துகொண்டேன். 'இங்க பாருங்க, இப்படித்தான் பிடிச்சிக்கணும், ஒவ்வொரு படியா கால்வச்சி ஏறிட்டே இருக்கணும். அக்கம்பக்கமோ கீழயோ மேலயோ பாக்கக் கூடாது. நேராத்தான் பாக்கணும். தெரிஞ்சிதுங்களா ' என்றபடி அவர் சடசடவென பத்து படிகள் மேலே ஏறிநின்று என்னைப் பின்தொடர்ந்துவரும்படி சொன்னார். அவரிடம் முடியாது என்று சொல்லமுடியாத அச்சம் ஒருபுறமும் துணிச்சலுடன் ஏறத் தெரியாத இயலாமை மறுபுறமும் வருத்த, கலவரத்துடன் கோபுரத்தில் ஏறவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியின் முதல் படியில் கால்வைத்தேன். பத்துப் படிகள் ஏறியதும் ஏணியிலிருந்து கோபுரத்துக்குத் தாவினேன். மேலும் பத்துப் படிகள் ஏறினேன். அநேகமாக அங்கிருந்து ஊரே தெரிந்தது. தொலைவில் யூக்கலிப்படஸ் மரத்தொகுதிகளும் ஊடே செல்கிற வாகனங்களின் வரிசையும் மாடிக்கட்டடங்களின் விளம்புகளும் தெரிந்தன. இதயம் வேகவேகமாகத் துடிக்கத் தொடங்கியது. தொடைகள் நடுங்கின. மேலும் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.

எனக்கும் மேலே பத்தடி சென்று நின்ற அதிகாரி குனிந்து என்னைப் பார்த்து 'ம், மேல வாங்க ' என்று சைகை செய்தார். என் தொடைகள் ஒத்துழைக்க மறுத்தன. கழுத்துக்கடியில் வேர்வை அரும்பத் தொடங்கியது. எந்த நேரத்திலும் கைகள் நழுவிவிடும் என்று தோன்றியது. நான் நிதானமான குரலில் மன்னித்துக்கொள்ளும்படியும் தொடரமுடியாது என்றும் சொன்னேன். என் குரலோ முகமோ அவரை இளகவைத்திருக்கவேண்டும். சடசடவென்று இறங்கி என்னருகே வந்தார். 'என்ன தம்பி, என்ன தம்பி என்ன ஆச்சி, பயப்படாதீங்க பயப்படாதீங்க ' என்றார். பத்து நிமிடங்கள் முன்னால் என்னை விரட்டும் தொனியில் பேசிய அவரா அப்படிப் பேசுகிறார் என்று எனக்கு வியப்பாக இருந்தது. என் விரல்மீது தன் விரலைப் பதித்தார். ஒவ்வொரு காலையும் எப்படி எடுத்துக் கீழிறக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அவர் சொன்னபடியே செய்தேன். தரையில் கால்வைக்கிற வரை ஒரு பூமாதிரி என்னைச் சுமந்துகொண்டு இறக்கினார். கீழே உட்கார வைத்து ஓடிப்போய் தண்ணீர் எடுத்துவந்து தந்து பருகச்சொன்னார். பிறகு சிறிதுநேரம் என்னை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டுப் பக்கவாட்டுக் கம்பிகள் வழியாகச் சரசரவென்று அக்கோபுரத்தில் ஏறத்தொடங்கினார்.

அவரிடம் வேலை செய்த மற்றவர்கள் அவரைச் சதாநேரமும் திட்டிக்கொண்டே இருப்பார்கள். அவரைப்பற்றிய பேச்சை எடுத்தாலே 'என்னைக்கு கீழ விழுந்து சாகப்போறாரோ ' என்று கெட்டவார்த்தைகளுடன்தான் தொடங்குவார்கள். எல்லாருடைய சாபங்களும் அவர்மீது கவிந்தே இருந்தன.

ஒருநாள் மாலை ஆறுமணிவரை கோபுரத்தில் வேலைசெய்துவிட்டு இறங்கினார். காலில் ஆறாத ஒரு புண்ணை மருத்துவரிடம் காட்டுவதற்காக வண்டியிலேயே சென்றார். கட்டு கட்டிக்கொண்டு காலை இறக்கி ஊன்றி நடக்க எத்தனித்த தருணத்தில் தடுமாறிக் கீழே விழுந்தபோது சட்டென உயிர் பிரிந்துவிட்டது. கால்நொடியில் யாராலும் நம்பமுடியாத அந்த மரணம் சம்பவித்துவிட்டது.

'என்னைக்குச் சாவப்போறாரோ ' என்று சாபமிட்டபடி பேசிக்கொண்டிருந்த நாங்கள் ஒட்டமாக ஓடினோம். உயிரற்ற அவரது உடலைப் பார்க்கமுடியவில்லை. சிங்கம்போலச் சிலிர்த்துக்கொண்டும் உறுமிக்கொண்டும் இருந்த ஒரு ஆள் கிடக்கக்கூடாத நிலையில் அவர் கிடந்தார். பார்க்கவே மனம் என்னவோ போலச் செய்தது. ஏதாவது ஒரு கணத்தில் 'என்ன மேன், ஏன் இப்படி சிலைமாதிரி நிக்கறே ? ' என்றபடி எழுந்துவிடமாட்டாரா என்று தோன்றியது. அவர் உடல் மின் எரியூட்டிக்குள் தள்ளப்படும்பொழுது அனைவரின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது. அதுவரை அவரை வெறுத்துப் பேசியவர்களும் அவருடைய மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கைக்குழந்தைகள் போலத் தேம்பினார்கள். அத்தனைக் காலமும் அவர்மீது கொட்டப்பட்ட வெறுப்புக்குப் பொருளே இல்லை என்று அக்கணம் புரிந்தது. உள்ளூர அவரை எல்லாரும் நேசிக்கவே செய்தார்கள் என்றும் அவர்மீது இருந்த ஆழமான பிரியத்தையே வசைகளாகவும் வெறுப்புகளாகவும் அவர்கள் காட்டிக்கொண்டிருந்தார்கள் என்பதும் புரிந்தது.

நிஜவாழ்வில் இப்படிப் பலர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பாவையோ அம்மாவையோ வெறுக்கும் பலர் உள்ளூர அவர்களை விரும்புகிறவர்களே. ஆசிரியர்களையோ அதிகாரிகளையோ வெறுப்பவர்கள்கூட ஒருவிதத்தில் அன்பு மிகுந்தவர்களே. அவ்விதமான எண்ணங்கள் மனத்தில் அலைமோதும்போதெல்லாம் ஒரு சிறுகதையில் சாந்தன் தீட்டிய ஒரு பள்ளிச் சிறுவனுடைய சித்திரமும் அவனது ஆசிரியருடைய சித்திரமும் நினைவுக்கு வருவதுண்டு.

நாலாம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் எடுத்த இராசலிங்கம் வாத்தியாருக்கும் விக்கினி என்கிற விக்கினராசாவுக்கும் இடையே இருந்த உறவின் ஞாபகத்தை அசைபோடுவதிலிருந்து தொடங்குகிறது அச்சிறுகதை. சிறுவர்களின் பார்வையிலிருந்து இராசலிங்கம் வாத்தியாரின் சித்திரம் நமக்குத் தீட்டிக்காட்டப்படுகிறது. அவர் மிகவும் கடுமையானவர். கொய்யாத்தடியால் அடித்துக் காயம் உண்டாக்கக்கூடியவர். சினத்தின் வடிவாகவே காலமெல்லாம் காணப்பட்ட அவர் ஒரேஒருமுறை மட்டும் வகுப்பறையில் சிரித்த சம்பவம் எல்லாருடைய மனத்திலும் பசுமையாகப் பதிந்து கிடக்கிறது. ீ I am a boy. You are a girl ' என்று லீலாவதி என்னும் மாணவியின் முன்னிலையில் சொல்ல வேண்டிய சூழலில் கனகநாதன் என்கிற சிறுவன் வாய்தவறுதலாக ீ I am a boy. You are my girl ' என்று சொல்லிவிட வகுப்பறையே விழுந்து விழந்து சிரிக்கிறது. கோபப்படக்கூடும் என்று நினைக்கப்பட்ட வாத்தியாரும் சிரிக்கத்தொடங்குகிறார். சிரிப்பூட்டிய அந்தச் சூழலைவிட வாத்தியாரின் சிரிப்பு எல்லா மாணவர்களுக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது.

இராசலிங்கம் வாத்தியார் என்றாலே அவரது அடிகள் மட்டுமே முதலில் ஞாபகம் வருகிற அளவுக்கு மாணவர்களை வெவ்வேறு காரணங்களுக்காக அடிக்கத் தயங்காதவராக இருக்கிறார் அவர். ஒருமுறை சிலேட் அழிக்க ஈரப்பலா பொறுக்கும்போது பிள்ளைகளுக்கிடையே நிகழ்ந்த மோதலைக்கண்டு அடிவிழுகிறது. இன்னொரு முறை பன்னவேலை வகுப்பில் பெட்டி இழைக்கும் பயிற்சியில் மூலைதிருப்பும் வேலை கைவராததில் அடிவிழுகிறது. மற்றொரு முறை பாக்குவெட்டிக் குருத்து பறிக்கப்போய் பீங்கான் ஓடுவெட்டிக் காலில் ரணமானதில் வகுப்புக்கு வராமல்போன காரணத்தால் அடிவிழுகிறது. அடிக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை என்று நினைக்கிறார்கள் சிறுவர்கள். அவருக்குத் தேவை ஏதோ ஒரு காரணம். அவ்வளவுதான். பிறகு அடிமழை தொடரும். இதுதான் பிள்ளைகள் மனத்தில் அவரைப்பற்றிப் பதிந்திருக்கிற சித்திரம். அதே சமயத்தில் பாடம் சொல்லித் தருவதிலும் மனத்தில் பதியுமாறு எடுத்துரைப்பதிலும் அவர் எக்குறையும் வைப்பதில்லை.

எதற்கெடுத்தாலும் அடித்துவிடுகிற வாத்தியாரின் கொடுமைகளிலிருந்து மீள்வதற்காகச் சிறுவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிங்கம் முயல் கதையில் காட்டுமிருகங்கள் கூடி ஆலோசித்ததைப்போல திட்டமிடுகிறார்கள். எல்லாருமே அவரிடம் உதைவாங்கி உடல்பழுத்தவர்கள். வாத்தியாருடைய காலடிமண்ணைக் கவனமாக யாருக்கும் தெரியாமல் எடுத்து மண்சட்டியில் போட்டு வறுத்து, அந்த மண்ணைப் பாழுங்கிணறொன்றில் கொட்டுவதன் மூலம் அவருக்குச் செய்வினை வைக்கும் யோசனை அனைவராலும் ஏற்கப்படுகிறது. யோசனை சொன்னவன் விக்கினி. காலடி மண்ணைச் சேகரிக்கும் வேலையில் மட்டும் மற்றவர்கள் உதவி அவனுக்குத் தேவைப்படுகிறது. மற்ற வேலைகள் அனைத்தையும் தன்னந்தனியாகச் சமாளிக்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நாளும் குறிக்கப்படுகிறது. முறைவைத்துப் பெருக்கப்படும் பள்ளிக்கூட வாசலைக் கூட்டிப்பெருக்கும் நாளாக அவ்வகுப்புக்கு வரக்கூடிய செவ்வாய்க்கிழமையே திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய நாள்.

குறிப்பிட்ட நாளில் காலையில் இராசலிங்கம் வாத்தியார் சைக்கிளில் வந்து இறங்குகிறார். செருப்புப் போடாத வாத்தியாரின் காலடிகள் தரையில் பளிச்சென்று பதிகின்றன. யார் கண்ணிலும் படாதவகையில் இரண்டு பாதஅடிகளிலிருந்தும் மண்ணை அள்ளிக்கொள்கிறான் விக்கினி. மண் அள்ளப்பட்ட அடையாளம் சற்றும் தெரியாத வகையில் இன்னொரு சிறுவன் விளக்குமாறால் இழுத்துச் சமப்படுத்திவிடுகிறான். அந்த மண்ணை ஒரு தாளில் வைத்து மடித்து மறைவாக ஒரு மரப்பொந்துக்குள் வைக்கிறார்கள். மாலை பள்ளிவிட்டதும் எல்லாருமே சென்றபிறகு மண்பொட்டலத்தை எடுப்பதற்காக அடிமேல்அடிவைத்து நெருங்குகிறான் விக்கினி. துரதிருஷ்டவசமாக தாள் மட்டும் இருக்க மண்ணையெல்லாம் ஏதோ ஒரு காகம் கிளறிக்கிளறி உதிர வைத்திருக்கிறது. முயற்சி தோல்வியடையவே அடுத்த செவ்வாய்க்கிழமையில் எந்தத் தவறும் நேராத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான் விக்கினி.

எல்லாரும் அடுத்த செவ்வாய்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே வியாழக்கிழமை அன்று ஆங்கிலப்பாடம் எடுப்பதற்கு வரவேண்டிய இராசலிங்கம் வாத்தியார் வரவில்லை. மாறாக, வேறொரு ஆசிரியர் நுழைந்து ஏசத்தம் போடாமை இருந்து படியுங்கோ. இண்டைக்கு இராசலிங்கம் வாத்தியார் வரமாட்டார்ஏ என்று அறிவிக்கிறார். பிள்ளைகள் ஒன்றும் புரியாமல் அவரையே பார்க்கிறார்கள். தொடர்ந்து பேசிய ஆசிரியர் முதல்நாள் மாலையில் சைக்கிளில் சென்ற இராசலிங்கம் வாத்தியார் மீது ஒரு கார் மோதி விபத்து நடந்த விஷயத்தையும் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்த விஷயத்தையும் சொல்கிறார். ஆசிரியர் சொல்லி முடித்ததும் வகுப்பில் யாரோ அழும் சத்தம் கேட்கிறது. எல்லாரும் திரும்பிப் பார்க்கிறார்கள். விக்கினி தேம்பியபடி நிற்கிறான்.

கதையின் தொடக்கத்தில் விக்கினியைப் பற்றிய குறிப்பொன்று இடம்பெறுகிறது. அவன் துணிச்சலை விளக்கும் குறிப்பு அது. பாழும் கிணற்றின் நீர்மட்டத்தில் சுவர்க்கரையோடு நீந்திக்கொண்டு கிடக்கிற பெரிய பாம்பொன்றை நிலத்தில் நின்றே குறிதவறாமல் கல்லால் அடித்துக்கொன்ற குறிப்பு அது. அவன் வைத்த குறி இராசலிங்கம் வாத்தியார் விஷயத்தில்தான் தவறிவிடுகிறது. செய்வினை செய்ய எடுத்த காலடி மண் பாழாய்ப்போகிறது. செய்வினை செய்து ஆளை வீழ்த்தும் அளவுக்கு இராசலிங்கம் வாத்தியார் மீது ஒருவித வன்மமும் வெறுப்பும் அவன் மனத்தில் வளர்ந்துவிட்டிருக்கின்றன. அப்படிப்பட்டவன் தான் செய்ய நினைத்த வேலை இன்னொரு விபத்தால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்ததும் திருப்திப்பட்டிருக்க வேண்டும். மாறாக, தேம்பி அழும் அளவுக்கு அவன் மனம் உடைந்துபோகிறான். எந்த ஆசிரியர் மீது கோபமும் வெறுப்பும் படிந்திருக்கிறதோ அதே ஆசிரியர் மீது உள்ளூர அன்பும் படிந்திருப்பதை அவனே உணர்கிற தருணம் அது. கதையின் வெற்றிப்புள்ளியும் அதுதான்.

*

அறுபதுகளில் எழுதத் தொடங்கி எழுபதுகளில் எழுத்துலகின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டவர்களில் ஒருவர் ஐயாத்துரை சாந்தன் எனப்படும் சாந்தன். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஈழக் கலை இலக்கிய உலகிலே ஓங்கி ஒலித்த தேசிய முற்போக்கு ஜனநாயகக் குரலின் ஆரம்பக்கால ஆரவாரங்கள் தணிந்து தெளிந்து அடங்கிய நிலையில் தன் செழிப்பான எழுத்தின் வலிமையால் தனித்த இடம்பெற்றவர் சாந்தன். 'முளைகள் ' என்னும் இச்சிறுகதை 1976 ஆம் ஆண்டில் நவம்பர் மாத மல்லிகை இதழில் முதலில் இடம்பெற்றது. பின்னர் இதே தலைப்பில் 1982 ஆம் ஆண்டில் என்.சி.பி.எச். பிரசுரமாக வெளிவந்த கதைத்தொகுப்பிலும் இடம்பெற்றது.

மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…

- அருட்பெருங்கோ -

மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இன்னும் இருக்கிறது. எங்களுக்கு திருமணம் முடிந்து சென்னை வந்தபிறகு நைந்து போன அந்த கருப்பு வெள்ளைப்படத்தை ஏதோ பெரிய ரகசியம் போல தயங்கி தயங்கி தான் காட்டினாள். அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? ஆனால் மனைவி இறந்து போன நேரத்தில் இதை இதைத்தான் நினைக்க வேண்டுமென மனதுக்கு ஏதேனும் சட்டம் போடப்பட்டிருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் சொன்னதைக் கேட்கிற மாதிரியான மனதா எல்லோருக்கும் வாய்த்துவிடுகிறது? நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தவளைக் கொண்டு வந்து இந்த நாற்காலியில் உட்கார வைத்ததில் இருந்து அப்படியேதான் இருக்கிறாள். அப்போது இந்த திண்ணையில் சாய்ந்ததில் இருந்து நானும் இப்படியேதான் இருக்கிறேன். மனம் மட்டும் காலத்தை வருடக்கணக்கில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது. அவள் காலடியில் அழுதுகொண்டே இருக்கிற மகள், எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அவ்வப்போது தூண்டிவிடுவதுமாயிருக்கிறாள். இரவு முழுவதும் காரோட்டி வந்து சிவந்த போன கண்களில் வழிகிற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாய்ந்து அமரிந்திருக்கும் மகனை தாங்கியபடி நிற்கிறது இந்தப் பழையத் தூண்.

இந்தத் தூண் அப்போது இன்னும் அழகாய் இருந்தது. இந்தத் திண்ணையில் விரித்திருந்த பாயில்தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் என்றால், நானும், என் குடும்பமும். அன்று இந்தத் தூண் வரைக்கும் வந்து நின்றுவிட்டு, நிமிர்ந்துகூட பார்க்காமல் மறைந்துவிட்டாள். சாதகம் எல்லாம் பொருந்தியிருந்தும் மகளைச் சென்னைக்கு அனுப்ப அவள் வீட்டில் எல்லோருக்குமே தயக்கம்தான். அவள் சொல்லுகிற போதெல்லாம் கண்டிப்பாக ஊருக்கு அழைத்து வந்துவிடுவதாய் நான் வாக்குக் கொடுத்துதான் எங்கள் திருமணம் நடந்தது. சென்னை வந்து விட்ட இத்தனை வருடங்களிலும் 'எங்க மகிளிப்பட்டில…' என்று ஆரம்பித்து தினமும் பத்து முறையாவது சொல்ல, அவளுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன இந்த ஊரில். முதன்முறையாக ஊரைவிட்டு வெளியே வந்திருந்தாலும், ஒன்பதாவது வரையிலும் படித்திருந்ததால் சென்னை நாகரிகத்திற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் அவளுக்குப் பெரிய சிரமம் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இந்த ஊரை மொத்தமாய் தன்னோடு சுருட்டிக் கொண்டு வந்துவிட்டதைப் போல எப்போதும் இதனோடு நெருக்கமாகவே இருந்தாள். திருமணத்திற்குப் பிறகு என்னைப் பிரிகிற சில நாட்களும்கூட துயரமென அவள் வருந்தியபோதும், என்னோடு அவள் சென்னையில் இருந்த காலங்களை விட, அவளோடு நான் மகிளிப்பட்டியில் இருந்த காலங்களிலேயே அவள் முழுமையான மகிழ்ச்சியில் இருந்திருக்கிறாள். சென்னையிலிருந்து வரும்போது லாலாப்பேட்டையில் இறங்கும்போதே அவளிடம் தெரியும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன்.

லாலாப்பேட்டையில் இருந்து வரும் அடுத்த மினி பஸ்சின் சத்தம் கேட்கிறது. வாய்க்கால் முக்கில் இறங்கிய சொந்தங்களில் அங்கிருந்தே ஒப்பாரியை ஆரம்பித்து விட்ட ஒரு கிழவியின் குரலைக் கேட்டு, இங்கு அழுதழுது ஓய்ந்திருந்த பெண்களுக்கு மீண்டும் கேவல் ஆரம்பித்தது. அழுதுகொண்டே ஓடிவந்த பெண்களோடு இங்கிருந்த வர்களும் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பிக்க திடீரென சத்தம் அதிகமாகி, நினைவுக்குள் எதையெதையோ உடுக்கையடிக்கிறது எனக்கு. எல்லாப் பெண்களும் வட்டமாய்க் கட்டிப்பிடித்துக் கொண்டு அசைந்து அசைந்து ஒப்பாரி வைக்க, யாரும் நாற்காலியைத் தட்டி விட்டு விடக்கூடாதே என்கிற பயமெனக்கு. ஆடுகிறவர்கள் எல்லாரும் அவள் கையை இடித்து இடித்து விட அவள் கையை எடுத்து உள்ளே மடித்து வைக்கப் பார்க்கிறேன். ஆனால் அது நாற்காலியோடு கட்டப்பட்டிருக்க, அவள் கையையேப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மகன் அதனை வித்தியாசமாகப் பார்க்கிறான். அதற்குள்ளாகவே அவளைப் பிணம் என்று அவனால் உணர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது போல. என்னால் இன்னும் முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொள்ள முயன்றாலும், இது எல்லாமே கனவாக மாறி திடீரென நான் தூக்கத்தில் இருந்து விழிப்பேன்; எப்போதும் போல என் மார்பில் கை போட்டு அவள் துங்கிக்கொண்டிருப்பாள் என்றே நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றிரவு கூட என் மார்பில் கைபோட்டுக்கொண்டு தூங்கியவள்தானே இவள். திருமணத்திற்கு முன்பு நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்பட்டவள் திருமணத்திற்குப் பிறகு பல சமயங்களில் என்னையே வெட்கப்பட வைத்திருக்கிறாள். பேசும்போது கண்களைப் பார்த்து பேசுவது மட்டுமே நெருக்கமாய் இருப்பதை உணர்த்துமென்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, கைகளையோ, தோள்களையோப் பிடித்துக் கொண்டு இவள் பேசும்போது அது பொய்யென தோன்றியிருக்கிறது. தொடுதல் உணர்த்தும் அர்த்தங்கள் புரியவைத்தவள் அவள். இத்தனை வயசிலும் இரவுத் தூக்கம் ஒரே மெத்தையில் தான். கையைப் பிடித்துக் கொண்டோ, மார்பில் கைபோட்டபடியோதான் தூங்குவாள். இரண்டு பிரசவத்தின்போதும் பக்கத்திலிருக்க சொல்லி என் கைகளைத்தானே பிடித்துக் கொண்டிருந்தாள். முதல் கர்ப்பத்தின் போது என்ன குழந்தை வேண்டுமென்று அவள் கேட்டபோது, ஆண் என்று நான் சொன்னதும் ஆச்சர்யப்பட்டாள். மகன் அம்மாவிடம்தான் அன்பாயிருப்பான், மகள் தான் அப்பாவிடம் அன்பாயிருப்பாள் என்று, எனக்கு விளக்கமெல்லாம் சொன்னாள். என் மேல் பாசமாயிருக்கிற மகளை விட அவள் மேல் பாசமாயிருக்கிற மகன் தான் வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஆனால் அப்போது பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுச் சிரித்தாள். இரண்டாவது பிரசவத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தான். நேற்று நடந்தது போலிருந்தாலும் எல்லாம் முடிந்து முப்பது வருடமாகி விட்டது.


ஆண்கள் வரிசையாக வர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நான் எழுந்து நின்று இரு உள்ளங்கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். ஒவ்வொருவராக அவர்கள் கைகளினால் என் உள்ளங்கை தொட்டு என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்களாம். வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும்தான். துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களாம். அவர்களுக்கும் துக்கமாக இருக்கிறது என்று சொல்லட்டும். ஆனால் என் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதாக சொல்லுவதுதான் வேதனை. இருக்கிற துக்கத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விட முடியுமென்றால் நன்றாகத்தான் இருக்கும். முடியுமா? எல்லோரும் அங்கங்கே அமர்ந்து கொண்டபிறகு மீண்டும் திண்ணையில் சாய்கிறேன். 'என்னைய்யா அருவது வயசு ஆம்பள அழுவலாமா? சந்தோசமா பொண்டாட்டிய அனுப்பி வைப்பியா' தடி ஊன்றி வருகிற எழுபத்தைந்து வயது பெரியவர் என் தோளைப் பிடித்துக் கொண்டு சொல்லி விட்டு அமர்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்தபோது சாராயத்தைக் குடித்துவிட்டு அழுது தீர்த்தவர், இப்போது எனக்கு அறிவுரை சொல்கிறார். அவர் சாராயம் குடித்து விட்டு அழுதார். நான் சாராயம் குடிக்காமல் அழுகிறேன். ஆணென்றால் அழக் கூடாதென்று யார் சொன்னது?

ஆண் அழக்கூடாதென்று அவள் சொல்லியிருக்கிறாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் மாரடைப்பு வந்தபோது மருத்துவமனையில் அவளைத் தேற்றி விட்டு வெளியே வந்து நான் அழுததை எப்படியோ தெரிந்துகொண்டு விட்டாள். அறுவை சிகிச்சையறைக்கு அவளை உள்ளே அனுப்பும்போது பயப்படாமல் இருக்க சொல்லி நான் தேற்ற, 'நான் உள்ள போனதும் நீங்களும் இங்க அழாதீங்க. ஆம்பள அழக் கூடாது' என்று என்னைத் தேற்றி விட்டுப் போனாள். அதற்கு முன்பெல்லாம் நோயென்றா, உடல்நிலை சரியில்லையென்றோ மருத்துவமனைக்கேப் போகாதவள். எப்போதாவது இரவு நேரத்தில் தலைவலிக்கிறதென சொல்லுவாள். கொஞ்சம் சுக்கு தட்டி போட்டு சூடாக ஒரு டம்ளர் காப்பி வைத்துக் கொடுத்தால் குடித்துவிட்டு படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்து எப்போதும் போல இயங்க ஆரம்பித்துவிடுவாள். கடைசி வரைக்கும் அவளுக்காக நான் செய்த ஒரே சமையல் சுக்கு காபி மட்டும் தான். அவள் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்கு எந்த வேலையை செய்வதற்கும் அவள் என்னை அனுமதித்ததில்லை. அந்த குற்றவுணர்ச்சியில் அவளை நான் கவனித்துக்கொள்வதற்காகவேனும் தலைவலியென்று அவள் படுத்துக் கொள்ளக்கூடாதா என்று சில சமயம் யோசிப்பேன்.

நாற்காலியிலிருந்து இறக்கி நீள பெஞ்சில் அவளைப் படுக்க வைத்து விட்டார்கள். பெண்கள் எல்லாம் சேர்ந்து புடவைகளைச் சுற்றிப் பிடித்து மறைப்பு கட்ட, குளிப்பாட்டித் தயார்படுத்துகிறார்கள். வேறு புடவை உடுத்தி, பெஞ்சோடு அவளைக் கொண்டு வந்து நடு வாசலில் வைத்து சடங்குகள் துவங்குகின்றன. என்னையும் அழைக்கிறார்கள். அவள் நெற்றியில் சந்தனத்தை தடவுகையில் எனக்கு கை நடுங்குகிறது. அதற்கு மேல் முடியாமல் மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்கிறேன். எல்லா சடங்குகளையும் முடித்து அவளைத் தேரில் தூக்கி வைக்கிறார்கள். தேருக்கு முன்னால் நடந்து செல்ல நானும் எழுந்து போக வேண்டும்.

சொர்க்கத்திற்கு யார் முன்னால் செல்வதென்று ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். இந்த உலகத்தில் அவளை விட்டுத் தனியாக எனக்கு இருக்க தெரியாதாம். அதனால் நான் தான் முதலில் போக வேண்டுமென்றும், என்னை அனுப்பி வைத்து விட்டு அவள் பிறகு வர விரும்புவதாகவும் சொன்னாள். ஒருவேளை அவளை முதலில் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். 'எமன எப்படியாவது ஏமாத்திட்டு திரும்பி உங்ககிட்டயே வந்துடுவேன்ல' என்று சொல்லி சிரித்தாள்.

தேரில் படுத்துக்கொண்டு இப்போது கண்களைத் திறந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாளே இது நிஜம்தானா? என்னைத் தவிர வேறு யாரும் அவளைப் பார்க்கவில்லையா? அவள் மெதுவாக எழுகிறாள். இப்போதுதான் மற்றவர்களும் கவனிக்கிறார்கள். அழுது கொண்டிருந்த சத்தம் அப்படியே நின்று போகிறது. தேரைத் தூக்கப் போனவர்கள் அப்படி அப்படியே சிலை போல நிற்கிறார்கள். அடித்துக் கொண்டிருந்த மேள சத்தம் கூட நின்றுவிட்டது. என்னால் இன்னும் என் கண்களை நம்பவே முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தவள், கட்டப் பட்டிருந்த கைகளை விடுவித்துக் கொள்கிறாள். யாருக்குமே அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை. எல்லாருமே ஆச்சர்யத்தில் அப்படியே வாயடைத்து சிலை போல நிற்கிறார்கள். இல்லை பயமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவள் வெகு சாதாரணமாக தூங்கி எழுபவளைப் போல கட்டுகளை அவிழ்த்து விட்டு என்னை நோக்கி நடந்து வருகிறாள். எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வருகிறது. எல்லாமே கனவாகத்தான் இருக்குமோ? வீட்டிலிருக்கும் மெத்தையிலிருந்துதான் தூங்கியெழுந்து வருகிறாளா? சுற்றிலும் நன்றாக உற்றுப் பார்த்தேன். இல்லை. இல்லவே இல்லை. நேற்றிரவு மாரடைப்பு வந்து மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவள் இறந்ததும் உண்மை. இரவோடிரவாக இங்கு மகிளிப்பட்டிக்கு கொண்டு வந்ததும் உண்மை. அவளைத் தேரில் தூக்கி வைத்தபின் உயிர் பெற்று எழுந்து வந்து இதோ என் முன் எப்போதும் போல அழகாக சிரித்துக் கொண்டிருப்பதும் உண்மைதான். சொன்னது போலவே எமனை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளா? இதெல்லாம் சாத்தியமா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு அவள் திரும்பி வந்ததே போதும். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம் பேசுகிறேன். இன்னுமிந்த ஆச்சர்யத்திலிருந்து விடுபடமுடியாமல் சத்தமே இல்லாமல் வெளி வருகின்றன என் வார்த்தைகள் – 'சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டியாம்மா?'. கேட்டதும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் – 'இல்லீங்க… நீங்க தான் வந்துட்டீங்க'

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.