Thursday 9 October 2008

ஆத்மாவை திற ஆனந்தம் போஅங்கடும்

எழுத்தாளர் ஒருவர், ஜென் ஞானியிடம் கேட்டார்:
``ஞானமடைந்துவிட்டால் ஒருவருடைய எல்லா பிரச்னைகளுமே தீர்ந்துவிடுமா? அவரின் எல்லா குறைகளுமே நிறைகளாகிவிடுமா?''
அப்போது அவரிடம், ``எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடவேண்டும் என்பது நிஜத்திற்கு ஒத்துவராத பேராசை. எல்லா குறைகளும் நிறைகளாகிவிடவேண்டும் என்பதும் உண்மைக்கு ஒத்துப்போகாத கோரிக்கை'' என்று ஞானி சொன்னதும்,
``ஞானமடைந்தாலும் எந்தப் பிரச்னையும் சரியாகாதா?'' என்று எழுத்தாளர் ஆச்சரியமாய் கேட்டார்.
அதற்கு ஜென் ஞானி மிக அழகாய் பதில் சொன்னார்,
``பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை. எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள்கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை.''வரலாற்றை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் மேற்சொன்ன ஜென் கதையின் ஆழமான தாத்பரியம் புரிய வரும்.
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு தியான சத்சங்கத்தில் குறிப்பிட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
``10 வயதுக் குழந்தைக்கு 10ஆவது புத்தகம் புதிராய் இருக்கும். காரணம், புரியாத எதையும் `புதிர்' என்று மனம் மாற்றிக்காட்டும்.
சுதந்திரப் பறவையாய் சுற்றித் திரியும் இளம் உள்ளத்திற்கு குடும்பம், வீடு, தொழில், சமுதாயம் என்ற எல்லாமே எதிர்காலத்தில் வரஇருக்கும் பெரிய பொறுப்பாய்த் தெரியும். எதிர்காலம் பயமாயிருக்கும்.
காரணம், புதிதான எதையும் `பயம்' என்று மனம் மாற்றிக்காட்டும்.
`எனது வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்வேன்' என்று வாழ ஆரம்பித்தவர்களுக்கு, தங்களின் விருப்பப்படி முழுமையாய் வாழ முடியாதபோது தங்களிடம் பல குறைகள் இருப்பதாகத் தெரியும்.
காரணம், இயலாமைகளை `குறைகள்' என்று மனம் மாற்றிக்காட்டும்.
யாருடைய வாழ்விலும் புதிர்கள் இல்லவே இல்லை. மனத்தால் மாற்றிக் காட்டப்படும் மாயங்கள்தான் இவை.''
``மாயமானாலும் நிஜமானாலும் எப்படி விடுபடுவது'' என்று கேட்டபோது, அவரிடம் சொன்ன பதிலை இங்கு குறிப்பிடுகிறோம்:
மூன்று முக்கியமான தியான சூத்திரங்கள்:
தியான சூத்திரம் 1 : புரியாத வரைதான் புதிர்.
புரியாத ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
தியான சூத்திரம் 2 :
புதிதாய் தெரியும் எதையும் விட்டு வைக்காதீர்கள். புதிய துறை, புதிய மனிதர்கள், புதிய சூழல் என்று உங்களின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் எதையும் விட்டுவைக்கும் வரைதான் அவை உங்களை பயமுறுத்தும்.
தியான சூத்திரம் 3 :
இயலாமைகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி, உங்களிடம் இருக்கும் பலங்களைப் பார்த்து உற்சாகம் பொங்க வாழ ஆரம்பித்தாலே நிறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
குறைகளால் நின்ற வாழ்வு,
நிறைகளால் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பிக்கும்..
(ஆனந்தம் பெருகும்)
ஆத்ம தியானம்
உங்களின் பலவீனம்தான் உங்களுடைய வாழ்வின் திருப்புமுனை. பலவீனத்தை விட்டு வைத்தால் அது மேலும் மேலும் உங்களை பலவீனப்படுத்தும். பலவீனத்தைத் தாண்டி உழைத்தால் அது மேலும், மேலும் உங்களை பலப்படுத்தும்.
வாழ்வில் ஜெயித்தவர்களெல்லாம், தங்களின் பலவீனங்களை பலமாக்கியவர்கள். வாழ்வில் தோற்றவர்களெல்லாம், தங்களின் பலவீனங்களை பலமாக்காமல் விட்டுவிட்டவர்கள். பலவீனங்களை பலமாக்குங்கள். பலம் வாய்ந்தவராவீர்கள்.