இது கவிஞர் புதியவன் கவிதைகள்
கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...
இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...
முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...
சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...
ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...
உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?
--
Friday, 20 November 2009
நான் இரசித்த கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment