Friday, 11 July 2008

பெருகிவரும் வன்முறை - தோழி இதழில் அருந்ததிராய்


நாட்டில் வன்முறை பெருகிவரும் சூழல் நிலவுவதாகத் தோன்றுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? எத்தகைய பின்னணியில் இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்?
இந்த அறிகுறிகளைப் புரிந்துகொள்ள நீங்கள் மேதையாக இருக்கவேண்டியதில்லை. நமது நடுத்தரவர்க்கம் தடாலடியான நுகர்வுக் கலாச்சாரத்திலும் மூர்க்கத்தனமான பேராசையிலும் ஊறி வளர்ந்திருக்கிறது. தொழில்மயமான மேற்கத்திய நாடுகளிலிருந்து வேறுபட்ட வகையில் இதற்கான வளத்தைச் சேகரிக்கவும் அடிமைப் பணியாளர்களைத் திரட்டவும் நம்மை நாமே காலனியமயமாக்கிக்கொள்ள நேர்ந்திருக்கிறது.
நமக்குக் கீழே உள்ளவர்களைச் சுரண்டவேண்டியிருக்கிறது. நமது உறுப்புகளை நாமேதின்கிறோம். இப்படி உருவாகும் (இது தேசப்பற்றுக்கு மாற்றான ஒரு மதிப்பாக மார்க்கெட்டிங் செய்யப்படுகிற) பேராசையை, வலுவற்றவர்களின் நிலத்தையும் நீரையும் பிற ஆதாரங்களையும் ஆக்கிரமித்துத்தான் தீர்த்துக்கொள்ள முடிகிறது.
சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்ததிலேயே மிக வெற்றிகரமாக நடந்துவரும் பிரிவினைப் போராட்டத்தைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும் நாட்டிலுள்ள பிற மக்கள் கூட்டத்திடமிருந்து பிரிவதுதான் இந்தப் பிரிவினை. இந்தப் பிளவு நீளவாக்கில் நடைபெறுகிறது; குறுக்குவாட்டில் அல்ல. உலகிலுள்ள பிற மேல்தட்டு வர்க்கங்களுடன் இணைந்துகொள்ளவே அவர்கள் போராடுகிறார்கள். இயற்கை ஆதாரங்கள், நிலக்கரி, தாதுப் பொருட்கள், பாக்சைட், தண்ணீர், மின்சாரம் - எல்லாம் அவர்களது வசமாகியுள்ளன.
புதிய எதேச்சாதிகாரத்தின் புதிய கௌரவப் பிரஜைகளுக்குப் புதிய சிறப்பான விளையாட்டுப் பொருள்களை - இன்னும் அதிகமான கார்களை, இன்னும் அதிகமான வெடிகுண்டுகளை, இன்னும் அதிகமான சுரங்கங்களை உருவாக்குவதற்கான நிலம் இப்போது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே இது வெளிப்படையான ஒரு போர். இரு தரப்பிலும் உள்ள மக்கள் தங்களுக்கான ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அரசும் நிறுவனங்களும் அமைப்பு ரீதியான சமரசங்கள், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டு மூலதனம், சாதகமான நீதிமன்ற ஆணைகள், சிநேகமான கொள்கை வகுப்பாளர்கள், 'நட்பான' கார்ப்பரேட் ஊடகங்கள், இவ்வளவையும் மக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் காவல் துறை ஆகியவற்றின் உதவியை நாடுகின்றன.
இதை எதிர்ப்பவர்கள் இதுவரை மறியலையும் உண்ணாவிரதத்தையும் சத்தியாக்கிரகத்தையும் மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்தார்கள்; நீதிமன்றங்களையும் நட்பார்ந்த ஊடகத்தையும் நம்பியிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் துப்பாக்கி ஏந்தத் தொடங்கிவிட்டார்கள். இந்த வன்முறை அதிகரிக்குமா? முன்னேற்றத்தையும் மக்கள் நல்வாழ்வையும் அளவிடுவதற்கு அரசு 'வளர்ச்சி விகித'த்தையும் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணையும் தான் பயன்படுத்தும் என்றால் வன்முறை அதிகரிக்கத்தான் செய்யும். இந்த அறிகுறிகளை நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன்? அப்பட்டமாகத் தெரிவதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது என்பதில் சந்தேகமில்லை.
வன்முறையில் இறங்கமாட்டேன், ஆனால் நாட்டில் நிலவும் சூழலில் அதைக் கண்டனம் செய்வது தார்மீகமற்றது என்று நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தக் கண்ணோட்டத்தை விரிவாக விளக்க முடியுமா?
நான் கெரில்லாவாக இருந்தால் சுமையாகத்தான் இருப்பேன்! 'தார்மீகமற்றது' என்னும் வார்த்தையை நான் பயன்படுத்தினேனா என்று சந்தேகமாக இருக்கிறது. தார்மீகம் என்பது பிடிபடாத சமாச்சாரம்; அது வெப்பநிலைபோல மாறிக்கொண்டே இருப்பது. வன்முறைசாரா இயக்கங்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டிலுள்ள எல்லா ஜனநாயக நிறுவனங்களின் கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அவை வெறுப்புடன் நிராகரிக்கப்படுகின்றன; அவமானப்படுத்தப்படுகின்றன.
போபால் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களையும் நர்மதா அணைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் பாருங்கள். நர்மதைப் பாதுகாப்பு இயக்கத்திற்குச் சாதகமான பல அம்சங்கள் இருக்கின்றன - பிரபலமான தலைவர்கள், ஊடகச் செய்திகள், வேறு எந்த மக்கள் இயக்கத்தையும்விட அதிக வசதிகள் ... ஆனால், பிழை எங்கே நேர்ந்தது? மக்கள் கட்டாயம் தங்கள் போராட்ட உத்திகளை மாற்றிக்கொள்ளவே விரும்புவார்கள்.
தாவோசில் உலகப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் சோனியா காந்தி சத்தியாக்கிரகத்தின் மேன்மை பற்றிப் பேசத் தொடங்குகிறார் என்றால் நாம் நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள். உதாரணமாக, ஒரு ஜனநாயக அரசமைப்பில் ஒத்துழையாமைப் போராட்டம் சாத்தியமா? தகவல் புரட்டும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் உள்ள வெகுஜன ஊடகமும் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில் அது சாத்தியமா? உண்ணாவிரதப் போராட்டங்களுக்குப் பிரபலங்களின் அரசியலுடன் தொப்புள் கொடி உறவு இருக்கிறதா? நங்கலா மச்சியிலோ பட்டிசுரங்கங்களிலோ மக்கள் பட்டினிப் போர் நடத்தினால் அது பற்றி யாராவது கவலைப்படுவார்களா? இரோம் சர்மிளா ஆறு ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
நம்மில் பலருக்கும் அது படிப்பினையாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் ஒரு நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத் தப்படுவது வேடிக்கையான முரண்பாடு என்றுதான் எனக்கு எப்போதும் தோன்றும். நாம் இப்போது வேறு காலத்தில், வேறு இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வேறு மாதிரியான, மேலும் சிக்கலான எதிரிகளை எதிர்கொண்டிருக்கிறோம். நாம் என்.ஜி.ஓ. யுகத்தில் பிரவேசித்திருக்கிறோம். இதில் மக்கள் செயல்பாடு என்பது நம்பத்தகாத ஒன்றாக இருக்கக்கூடும். போராட்டங்கள் நிதியுதவியுடன் நடத்தப்படுகின்றன.
மறியல்களும் சமூக அமைப்புகளும் ஸ்பான் சர்ஷிப்பில் நடக்கின்றன. இவை ஆக்ரோஷமாகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் தாம் போதிப்பதை அவை நிறைவேற்றுவதில்லை. எல்லா விதமான போலிப் போராட்டங்களும் நடக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு அந்த மண்டலங்களின் மாபெரும் ஆதரவாளர்களே நிதியுதவி செய்கிறார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த பணிக்கும் கூட்டு நடவடிக்கைக்குமான விருதுகளையும் நல்கைகளையும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மொத்தமாக ஒழித்துக்கட்டும் நிறுவனங்களே வழங்குகின்றன.
ஒரிசா காடுகளில் பாக்சைட் அகழ்ந்தெடுக்கும் வேதாந்தா என்ற நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் தொடங்க விரும்புகிறது. நாடு முழுவதிலும் உள்ள போராட்டக்காரர்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார உதவி வழங்கும் இரண்டு அறக்கட்டளைகளை டாடா நிறுவனம் நடத்துகிறது. நந்திகிராம் அளவு சிங்கூர் விமர்சிக் கப்படாதது அதனால்தானோ? இப்போது உள்ள என்.ஜி.ஓ.க்கள் மிகுந்த ஆரவாரம் ஏற்படுத்துகின்றன, ஏராளமான அறிக்கைகள் எழுதுகின்றன; அரசோ இவர்களுடன் அந்நியோன்யமாக இருக்கிறது. இதையெல்லாம் நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நிஜமான அரசியல் செயல்பாடுகளை மந்தப்படுத்துபவர்கள்தான் இங்கே குவிந்திருக்கிறார்கள். போலி எதிர்ப்பு ஒரு சுமையாகவே ஆகியிருக்கிறது.
ஒரு காலத்தில் மக்கள் இயக்கங்கள் நீதிக்காக நீதி மன்றங்களை நம்பியிருந்தன. மிகவும் அநீதியான, ஏழை மக்களை மிகவும் அவமானப்படுத்தும் வார்த்தைகளில் அமைந்த தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கிக் குவித்திருக்கின்றன. அவற்றை நினைத்தாலே மூச்சு நின்றுவிடும்போலிருக்கிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம், வசந்த்கஞ்ச் மாலின் கட்டுமானப் பணியை - தேவையான ஒப்புதல்கள் எதுவும் அதற்கு இல்லாத நிலையிலும் - தொடர அனுமதி வழங்கியது. நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுமா என்ற கேள்வி எழவே இல்லை என்பதைத்தான் நீட்டி முழக்கிச் சொன்னது உச்ச நீதிமன்றம்.
கார்ப்பரேட் உலகமயமாக்கம், கார்ப்பரேட் நில ஆக்கிரமிப்பு யுகத்தில், என்ரான், மான்சான்டோ , ஹாலிபர்ட்டன், பெக்டெல் யுகத்தில் அந்தக் கூற்றுக்கு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. இது இந்த நாட்டிலேயே மிகச் சக்திவாய்ந்த அமைப்பின் சித்தாந்தத்தை அம்பலப்படுத்துகிறது. கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் இப்போது நீதித் துறையும் புதிய தாராளவாதச் செயல் திட்டத்தின் முதுகெலும்பாகவே தெரிகிறது.
இது போன்ற ஒரு சூழலில், மக்கள் இந்த முடிவற்ற 'ஜனநாயக' நடவடிக்கைகளால் ஓடாகத் தேய்ந்து போனது போல் உணரும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இதற்கு வன்முறை, அகிம்சை என்ற இரண்டே தேர்வுகள்தாம் இருக்கின்றன என்றில்லை. ஆயுதப் போராட்டத்தை நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் அவை வன்முறையைத் தங்கள் ஒட்டு மொத்த அரசியல் உத்தியில் ஒரு அம்சமாக மட்டுமே வைத்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் தொண்டர்கள் மிருகத்தனமாக நடத்தப்பட் டிருக்கிறார்கள்; கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பொய்யான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆயுதத்தைக் கையில் எடுப்பது என்றால் இந்திய அரசின் பலவிதமான வன்முறைகளுக்கு அழைப்பு விடுப்பது என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆயுதப் போராட்டம் ஒரு உத்தியாக மாறும் அந்த நொடியில் நம் உலகம் சுருங்கிவிடுகிறது; அதன் வண்ணங்கள் மங்கிக் கறுப்பு-வெள்ளை ஆகின்றன. ஆனால், மற்ற எல்லா வழிகளும் வேதனையில் முடிந்ததால் மக்கள் அப்படி ஒரு முடிவை மேற்கொண்டால் நாம் அதைக் கண்டனம் செய்தாக வேண்டுமா?
நந்திகிராமில் மக்கள் மறியல் நடத்திப் பாட்டெல்லாம் பாடியிருந்தால் மேற்கு வங்க அரசு பின்வாங்கியிருக்கும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? செயலற்றுக் கிடந்தால் இருக்கும் நிலைமையை ஆதரிப்பதாகும் (நம்மில் சிலருக்கு அது வசதியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை) காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயல்வேகம் கொண்டவர்களாக ஆகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த விலையைக் கொடுப்பவர்களைக் கண்டனம் செய்வது என்னால் முடியாது.
இது தொடர்பாக நீங்கள் பல இடங்களுக்குப் பயணம் செய்துவருகிறீர்கள். இது போன்ற பிரச்சினைக்குரிய இடங்களில் என்ன நடக்கிறது என்று சொல்ல முடியுமா? இந்த இடங்களில் நடைபெறும் போராட்ட முறைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?
பெரிய கேள்வி - நான் என்ன சொல்ல? காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பு, குஜராத்தில் நியோ பாசிசம், சட்டிஸ்கரில் உள்நாட்டுப் போர், ஒரிசாமீது பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வன்கொடுமை, நர்மதைப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கிப்போனது, முழுப் பட்டினியின் விளிம்பில் வாழும் மக்கள், கானக நிலத்தின் சீரழிவு, போபால் விஷவாயுக்கசிவில் உயிர் பிழைத்த மக்கள், அதே யூனியன் கார்பைடு நிறுவனத்தை - இப்போது அதன் பெயர் டோ கெமிக்கல்ஸ் - நந்திகிராமுக்கு அழைக்க மேற்குவங்க அரசு ஊக்கப்படுத்துவதைப் பார்ப்பது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நான் அண்மையில் போகவில்லை.
ஆனால் லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பது நமக்குத் தெரியும். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறும் போலி என்கவுண்டர்களையும் கொடும் ஒடுக்குமுறையையும் பற்றி நமக்குத் தெரியும். இந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்கென்று ஒரு வரலாறு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவை உண்டு. எனினும் இவற்றை இணைக்கும் சரடு ஒன்று உண்டு - அவைமீது மிகப்பெரும் சர்வதேச கலாச்சார, பொருளாதார நிர்பந்தங்கள் சுமத்தப்படுகின்றன. இந்துத்வச் செயல்திட்டங்களை எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்? அது தனது விஷத்தை நுட்பமாகப் பரப்பிக்கொண்டு மீண்டும் வெடிக்கக் காத்திருக்கிறது.
இவற்றையெல்லாம்விடப் பெரும் குற்றம், நாம் இப்போதும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு நாடாக, கலாச்சாரமாக, சமுதாயமாக இருக்கிறோம் என்பதுதான். நமது பொருளாதார நிபுணர்கள் எண்களுடன் விளையாடி வளர்ச்சி விகிதத்தைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, லட்சக்கணக்கான மக்கள் - தோட்டிகள் - அன்றாட வயிற்றுப் பாட்டுக்காக மற்றவர்களின் மலத்தைக் கிலோ கணக்கில் தலையில் சுமந்து செல்கிறார்கள். அவர்கள் மலத்தைத் தலையில் சுமக்கவில்லை என்றால் பட்டினி கிடந்துசாக வேண்டும். இதுதான் ஒரு வல்லரசின் லட்சணமா?
அடுத்த தோழி இதழில் நேர்காணலின் தொடர்ச்சி இடம்பெறும்
.நன்றி: காலச்சுவடு

நம்புங்க !!! செக்ஸ் உடல் நலம் காக்கும்

Cute கவிதை