Wednesday, 16 September 2009

Fwd: அந்நியனே வெளியேறு சில்லறை வணிகமும், சில்லறைத் தனங்களும்




அந்நியனே வெளியேறு 
சில்லறை வணிகமும், சில்லறைத் தனங்களும் 

அ.முத்துக்கிருஷ்ணன் 
 

காலணியாக்கத்ததிற்குப் பின்பு இனி மீண்டும் உலகை தங்கள் பிடிக்குள் ஏகாதிபத்திய அரசுகளால் கொண்டு வர இயலாது என்பதால், அந்தப் பணியைச் செய்ய உலக வர்த்தக கழகம், உலக வங்கி என டஜனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் துவங்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் கண்டுபிடிப்பு தான் உலகமயம். அது தான் உலகை தன் கோரப்பிடியில் இறுக்கி வருகிறது.

அடர் வனங்களில் வசிக்கக்கூடிய பழங்குடிகள் இனி லாப்டப் கணினிகள், சொல்போன்கள் உபயோகிப்பார்கள், கிராமங்களில் உள்ள பாட்டிகள் கூட இவ்வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள். இது போன்ற எண்ணற்ற விளம்பரங்களுடன் தான் கடந்த 15 ஆண்டுகளாக உலகமயம் என்கிற சொல்லாடல் மெல்ல மெல்ல உலகின் விளிம்பு வரை பயணித்துள்ளது. புவியியல் பற்றிய நம் பிம்பங்கள் சிதறிவிட்டன. உலகம் ஒரு கிராமமாக உருமாறிக் கெண்டிருக்கிறது, இனி எதுவும் தொலைவில் இல்லை. இப்படித் தொடர்ந்து நம் ஊடகங்கள் வாயிலாக உலகமயம் பற்றிய புதுப்புது பிம்பங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பணம், பண்டங்கள், உற்பத்திப் பொருட்கள், மக்கள் தொழிட்நுட்பம், யோசனைகள், திட்டங்கள் என சகலமும் நாடுகளின் எல்லைகள் தாண்டி சுதந்திரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு தான் உலகமயம் போன்ற தோற்றம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று நம் நகரங்களில், ஊடகங்களில், வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்திற்கும் காரணம் உலகமயம். மேலும் உலகமயம் ஒரு நிறுத்த முடியாத, பின்வாங்க இயலாத, மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விசயம் எனவும் அடுத்த கட்டம் நோக்கி நகர்வது பற்றிய உரையாடல்கள் மட்டுமே இனி பயன் தரும் என்பதும் மக்கள் மனங்களில் திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகிறது.

விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் உலக வளங்களை, மக்களை அதிகாரப்பூர்வமாக சுரண்டுவதை, உலக நாடுகளின் அரசாங்கங்கள் ஒப்புதல் அளித்துக் கொண்டிருக்கிறது.

உலகமயத்திற்கான அடிப்படை சூழலை உருவாக்க 15 ஆண்டுகள் செலவிடப்பட்டு, தற்சமயம் சுரண்டலை முழுவீச்சில் நடத்தும் காலம் வந்து விட்டது. பாரபட்சமின்றி நம் அரசுகள் எல்லா விதிமுறைகளையும் தகர்த்து சுதந்திரமான, தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில் ஜ்யூரிச் நகரத்தில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் என பெரும் படையே சென்றது. இவர்களை வரவேற்க அங்கு விமான நிலையத்தில் பல வாசகங்கள் காத்திருந்தது. "உலகின் அதிவேகமாக வளரும் சந்தை ஜனநாயகம்'' மற்றும் "15 ஆண்டுகள், 6 அரசுகள், 5 பிரதமர்கள், ஒரு திசைவழி அதுதான் சுதந்திர வர்த்தகம் எனும் மந்திரச் சொல்''. இந்த மாநாட்டை அங்கு நடத்தும் பொறுப்பும், U$$ 4மில்லியன் செலவும் இந்திய வர்த்தக கழகம்(CII) ஏற்றுக் கொண்டது. இந்திய மத்திய அமைச்சரவை ஜனவரி மாதம் சில்லரை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதித்துள்ளது.

அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல 51 % அந்நிய முதலீடு. அத்துடன் வைரம் வெட்டுவது, புதிய விமான நிலையங்கள் அமைப்பது, மொத்த வியாபாரம் என பல துறைகளை முற்றாக தடைகள் நீக்கி வெளிநாட்டு முதலாளிகளின் கோரிக்கையை ஏற்றது. இனி அந்நிய நிறுவனங்கள் இந்த துறைகளில் வர்த்தகம் செய்ய எந்த அனுமதி, உரிமம் என எது பற்றியும் கவலை பட தேவையில்லை. சில்லரை வணிகத்தை பொறுத்தவரை தற்சமயம் ஒரு நிறுவன பொருள்கள் (Single Brand) மட்டுமே விற்பனை செய்யும் அங்காடிகளுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளதாக மைய அரசு கூறுகிறது. பல்பொருள் அங்காடிகளுக்கு (Multi Brand) இன்னும் அனுமதியளிக்கப்படவில்லையாம். இந்த பல்பொருள் அங்காடிகளை வெளி நாட்டு நிறுவனங்கள் துவக்குவதற்கு முன்பாகவே இந்திய சந்தையை ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என "ரிலையன்ஸ்' நிறுவனம் துடி துடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ரிலையன்ஸ் நிறுவனம் துவக்கியுள்ள காய்கறி கடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் இப்படிப் போட்டிப் போட்டு சில்லறை வணிகத்தில் நுழைவதற்கு காரணம் என்ன?

இந்தியாவில் மொத்த உழைக்கும் வர்க்கத்தில் 7% பேர் சில்லரை வணிகத்தில் உள்ளனர். அதாவது சுமார் 4 கோடி பேர், 1 கோடியே 10 லட்சம் சிறு அங்காடிகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் வருமானத்தை நம்பி 20 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெட்டிக்கடை, பலசரக்கு கடை, ஷாப்பி, கூடையில் காய்கறி விற்பவர்கள், சந்தைகள், வீடுகளுக்கு சென்று பண்டங்கள் விற்பவர்கள் என இது போன்ற சுய தொழிலாக உழைப்பில் ஈடுபடக்கூடிய இவர்களின் மொத்த வர்த்தகம் ரூ. 12, 82, 500 கோடி. இந்த 4 கோடி பேரில் 98% ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள். தினமும் ரூ.100150 வரை சம்பாத்தியம் செய்தால் அதுவே பெரிய விஷயம். இவர்களைப் பொறுத்தவரை அந்நிய முதலீடு என்பது வாழ்வை நிர்மூலமாக்கிவிடும். இந்தியாவில் 35 நகரங்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகை உடையவை. இந்த நகரங்களை குறி வைத்து தான் வால் மார்ட் என்கிற அமெரிக்க நிறுவனம் களமிறங்குகிறது. இந்த நகரங்களில் 35 கடைகளை அவர்கள் தொடங்கினால் அதில் 10,195 பேர் பணிபுரிவார்கள். ஆனால் இதே 35 நகரங்களில் சில்லரை வணிகமும், வாழ்வாதாரமும் பெற்ற 4,32,000 பேரின் எதிர்காலம் என்ன?

டெவீல்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற மென்பொருள் நாராயணமூர்த்தி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அந்நிய நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதியுங்கள். நுகர்வோர் பயன் பெறட்டும் என்றார். அடுத்து ஏர்டெல் நிறுவன அதிபர் சுனில் பாரதி அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இப்பொழுது பலசரக்குகடை வைத்திருப்பவர்களில் பலர் அடுத்த தலைமுறையில் இந்த தொழிலில் ஈடுபடப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் படித்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள், அவர்களை நாங்கள் வேலையில் அமர்த்திக் கொள்கிறோம். இந்திய ஊடகங்கள் மெச்சிக் கொள்ளும் இவர்களின் சிந்திக்கும் லட்சணத்தைப் பாருங்கள்.

அமெரிக்காவில் வால்மார்ட் அங்காடிகள் துவங்கப்பட்ட உடன் அதன் ஒவ்வொரு கிளையும் அதனை சுற்றி 6 கி.மீ சுற்றளவுக்கு இயங்கி வந்த எல்லா வர்த்தகத்தையும் விழுங்கி செரித்தது. ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் சமீபத்தில் கொடுத்த தொலைக்காட்சிப் பேட்டியில், அது போல் பாதிப்புகள் எங்கள் கடைகளால் ஏற்படாது. எங்கள் கடைகளால் 2 கி.மீ வரை தான் பாதிப்பு வரும் என ஒப்புக் கொள்கிறார்.

இந்த பெரு அங்காடிகள் மத்தியில் வாடிக்கையாளர்களை கவர்ந்து தங்கள் கல்லாவை நிரப்ப பெரும் போட்டி நிலவும், துண்டறிக்கைகள், போஸ்டர்கள், விளம்பரங்கள் என நம் ஊர் ஊடகங்களுக்கு இனி பெரும் வேட்டை தான்.

கடந்த மாதத்தில் சென்னை நகரத்தில் பல்வேறு பகுதிகளில் துவங்கப்பட்டுள்ள 12 கடைகள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறைந்த விலையில் காய்கறி கிடைக்கிறது என பலரும் இதனை வியப்புடன் அணுகி வருகிறார்கள். தினமும் விமானத்தில் காய்கறிகள் வந்திறங்குவது துவங்கி அதன் விற்பனை வரையிலான பல்வேறு நிலைகளை நாளிதழ்கள் நேரடி ஒளிபரப்பு போலவே வழங்குகிறது. ரிலையன்ஸ் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. இடைத் தரகர்கள் யாரும் கிடையாது என்று பல நாடுகளில் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் ஏற்கனவே ஒளித்து கட்டப்பட்டுவிட்டன.

ரிலையன்ஸ் நிறுவனமானது பாலியஸ்டர் நூலிழை விஷயத்தில் குஜராத் மாநிலத்தில் எவ்வாறு 3000 சிறு தொழில் நிறுவனங்களை அழித்து 1,50,000 குடும்பங்களை நடுத்தெருவுக்குத் துரத்தியது என்பது இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். இன்று அவர்கள் வைத்தது தான் விலை. அவர்களை தவிர வேறு எவரும் அந்தத் துறையில் நுழைய இயலாது. அதுபோலவே இனி வருங்காலத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் தான் விலை நிர்ணயம் செய்வார்கள். விவசாயிக்கு தான் விளைவித்த காய், கனிகள் மீது எந்த உரிமையும் இருக்காது. கரும்பு விவசாயத்தை பரவலாக்கி இன்று அதில் எப்படி அரசும், கரும்பாலைகளும் சூதாட்டத்தை நிகழ்த்துகிறார்கள் என்பதை நாடறியும். நீங்கள் கரும்பை வெட்ட அனுமதி வாங்க வேண்டும். அதற்கான பணம் எப்பொழுது வந்து சேரும் என்பதை நீங்கள் அறிந்த கொள்ள இயலாது. அதை மீறி நீங்கள் கரும்பை ஆட்டி வெல்லம் காய்ச்சினால், உங்கள் மீது சாராயம் காய்ச்சிய வழக்குகளை போடக் காவல்துறை தயாராக உள்ளது.

சமீபத்தில் சேலம், தும்பல் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டோ என்கிற இயக்குநர் இயக்கி வெளியாகியுள்ள ஆவணப்படம் இதனை மிகத் துல்லியமாக சித்தரித்துள்ளது. தும்பலில் இன்று தான் குடியரசு தினம் என்கிற இந்த ஆவணப்படத்தில் காவல்துறை சர்க்கரை ஆலை அதிபர்களின் கைப்பாவையாக மாறி அப்பாவி விவசாயிகள் மீது போட்ட கள்ளச்சாராய வழக்கும், அதனை அந்த மொத்த கிராமமே எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதையும் சித்தரிக்கிறது. மொத்தப் படமும் போராட்டத்தின் நேரடி பதிவாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஆவணப்படமாக அது திகழ்கிறது.

இது தவிர ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக விவசாயத்திலும் ஈடுபட உள்ளது. நகரங்களுக்கு வெளியே உள்ள வணிகர்களுக்கு நேரடி சப்ளை செய்ய ரேஞ்சர்ஸ் பார்ம் என்கிற புதிய நிறுவனம் தயாராக உள்ளது. எந்தத் துறையையும் விட்டு வைப்பதில்லையென உள்நாட்டுப், பன்னாட்டு முதலாளிகள் முடிவு செய்து விட்டார்கள். அரசு தன் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது. இனி அரசை நம்பி பிரயோஜனம் இல்லையென சொந்த முயற்சியில் வாழ்க்கையைத் தொடர்ந்த மக்கள் நிலை இன்று சிக்கலாகவே உள்ளது. சிறுதொழில்கள், சேவைகள் என எந்தத் துறையும் மீதமில்லை. ரிலையன்ஸ் காய்கறிக் கடை திறக்கிறது. ஏ.பி.டி. நிறுவனம் தன் மரபான மதுபானம் காய்ச்சும் தொழிலை செய்து கொண்டே பால் பாக்கெட், கூரியர் என வீடு வீடாய்ச் சென்று கொண்டிருக்கிறது. ஏர்டெல் பலசரக்குக் கடை தொடங்கவிருக்கிறது. இப்படி சமகாலத்தில் ஏராளமான நிறுவனங்கள் சேவைத் துறையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே இந்த ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து சிறுவணிகத்தில் பெரு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்து பேசி வந்த இடது சாரிகள் வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர். மேற்கு வங்கத்தில், வால் மார்ட் நிறுவன அதிபருடன் புத்த தேவ் கல்கத்தா நகரத்தில் இடம் பார்த்து வருகிறார். ஏற்கனவே விவசாயிகளின் தற்கொலை சாவுகளைத் தடுக்க வக்கற்ற தேச மாக இந்தியா திகழ்கிறது. ஒருபுறம் சாவுகள், விவசாயிகளின் தற்கொலை, பெரிய திட்டங்களால் வாழ்வாதாரம் இழந்தவர்கள், வேலையின்மை என பல வழிகளில் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானதாக, நிர்க்கதியாய் கிடக்கிறது. மறுபுறம் வல்லரசு என தன்னை மார்தட்டி கொள்கிறது தேசம். மென்பொருள் துறையின் அசுர வளர்ச்சி, இந்திய முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் என பெரு நகரங்களில் வண்ண வாழ்வின் அணிவகுப்பு. உலகமயம் இந்தியாவில் கடும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி சமூகத்தைப் பிளவுபடச் செய்துள்ளது. அதனால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக பல பாதகங்களைத் தான் சந்தித்து வருகிறார்கள்.

தேசத்தின் புறச் சூழலை எந்த வகையிலும் கருத்தில் கொள்ளாத சொரணையற்ற மத்தியதர வர்க்கம் இந்த சீரழிவுகளின் நாற்றங்காலாக விளங்குகிறது. சந்தையில் குவியும் பொருட்களை உடனடியாக வாங்கத் துடிக்கும் இந்த வர்க்கத்தன் அடிமை புத்திதான் சந்தை கலாச்சாரத்தின் மூலதனமாகத் திகழ்கிறது.

சந்தைக்கு வருகிற பொருட்கள் அனைத்தையும் வாங்கித் தீர்க்கும் கோரப் பற்கள் நீண்ட நுகர்வு வெறிபிடித்த வர்க்கமாக மத்திய தர வர்க்கம் உருமாறியுள்ளது. புதிய தொலைக்காட்சி பெட்டி, இருசக்கரவாகனம், செல்போன், கார், வீடு என சகலத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். இதுதான் நுகர்வு வெறி. ஷாப்பிங் செல்வது என்பது நமது தேவையின் அடிப்படையில் முன்பு இருந்தது. ஆனால், இன்று அது ஒரு அனுபவமாக மாற்றம் பெற்றுள்ளது. பெரு நகரங்களில் சினிமாவுக்குச் செல்வது கடற்கரைக்குச் செல்வது போல் ஷாப்பிங் பொழுதுபோக்காக மாறிவிட்டது. அங்கு பொருட்களை வாங்க இயலாவிட்டாலும் அதனைத் தொடர்ந்து பார்த்து மக்கள் ஏக்கம் பெற்று, பின்னர் அதனை அடையும் ஆசை வெறிக்கு ஆளாகிறார்கள்.

இவை ஒருபுறமிருக்க இந்தியாவின் பத்தாவது திட்ட வரைவில் உணவு வில்லைகள் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த வில்லைகளை அரசு இனிமேல் வழங்கும். நியாய விலை கடைகளை முற்றாக அடுத்த சில ஆண்டுகளில் ஒழிக்கப் போவதாக அரசு அறிவிக்கவிருக்கிற நிலையில் இந்த வில்லைகளை இந்த பெரு அங்காடிகளில் கொடுத்து மானிய விலையில் ஏழைகள் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ளலாம். அரசாங்கம் இந்த அங்காடிகளுக்கு மானியத்தை வழங்குமாம்.

சந்தேகமில்லாமல் தேசமே முட்டுச் சந்தில்தான் சிக்கித் தவிக்கிறது.


ஒரேயொரு ரிலையன்ஸ் நிறுவனம் இத்தனை கோடி மக்களின் வாழ்க்கையை அழித்து விட முடியுமா? என்று நீங்கள் எண்ணலாம். ஒன்றல்ல இரண்டல்ல, 25,000 கோடி ரூபாய் முதலீடு போட்டு நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் தொடங்க இருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சென்னை நகரில் மட்டும் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு ஒரு கடை வீதம் நூற்றுக்கணக்கான கடைகளைத் தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறது.

ஏற்கனவே பான்டலூன் நிறுவனம் வடபழனியில் தொடங்கியிருக்கும் பிக் பஜார், ஆர்.பி.ஜி குழுமத்தின் ஸ்பென்சர் டெய்லி, ஜெர்மன் நிறுவனமான ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன. இன்னும் டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளும் நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க இருக்கிறார்கள். இதுவன்றி, அமெரிக்காவின் வால்மார்ட், ஜெர்மனியின் மெட்ரோ, பிரான்சின் காரஃபோர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் பிரம்மாண்டமான சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன.


சென்னை நகரில் நாளொன்றுக்கு நடைபெறும் காய்கனி விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய். இதை அப்படியே விழுங்கிவிடத் துடிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சில்லறை வணிகத்தில் உலகிலேயே நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் 4 கோடிப் பேர். சுமார் 20 கோடிப் பேருக்குச் சோறு போடும் இந்தச் சில்லறை விற்பனைத் தொழில் முழுவதையும் விழுங்கி விடத் துடிக்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள்.

சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத்தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவீடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் ஒழித்து விட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள்? அம்பானியின் கடையில் அடுக்கி வைத்திருப்பவையெல்லாம் என்ன அதிசயக் காய்கனிகளா? கோயம் பேட்டில் விற்கப்படும் அதே ஊட்டி முட்டைக் கோசும், கம்பம் கத்தரிக்காயும் தான். ஆனால் அதையே கழுவித் துடைத்து கண்ணாடி ஷோகேஸில் வைத்து, கடைக்கு குளுகுளு வசதியும் செய்து சுத்தம் என்றும் ஃபிரஷ் என்றும் பிரமிக்க வைக்கிறார்கள்.

சில்லறை விற்பனை இவர்களுடைய பிடிக்குள் சென்றால், நமது நாட்டின் உணவு தானிய உற்பத்தி, காய், கனி, மலர் உற்பத்தி அனைத்தும், அதாவது விவசாயம், தொழில்துறைகள் அந்நியக் கம்பெனிகள் மற்றும் அம்பானியைப் போன்ற சில முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும்.

காய்கறி விற்பனையில் ரிலையன்சும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதென்பது வியாபாரிகளையும் விவசாயிகளையும் மட்டும் பாதிக்கின்ற பிரச்சினை அல்ல. நுகர்வோர் அனைவரையும், மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்சினை. கீரைகளில் பலவகை, காய்களில் பலவகை, மாம்பழத்தில் பலவகை என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய விவசாயிகள் உருவாக்கி வைத்திருக்கும் பல வகையான ரகங்கள், பல வகையான சுவைகள், பல வகையான மருத்துவ குணங்கள் கொண்ட காய் கனிகள் எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு, எந்த ரகத்தை விளைவித்தால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அந்த ரகத்தை தவிர வேறு எதுவுமே உற்பத்தியாகாமல் செய்துவிடும்.

பங்கனபள்ளி, நீலம், சிந்தூரா, ருமானி என்ற மாம்பழங்களின் வகைகள் எல்லாம் அழியும். "ரிலையன்ஸ் மாம்பழம்', "பிர்லா மாம்பழம்' என்று இந்த முதலாளிகள் உற்பத்தி செய்யும் பழங்கள் மட்டுமே சந்தையில் இருக்கும். இதெல்லாம் கட்டுக்கதையல்ல. மேற்கத்திய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் இதைத்தான் செய்திருக்கின்றன.

பல்வேறு சுவைகள் பல்வேறு ரகங்கள் என்பதெல்லாம் அழிந்து பருத்திக் கொட்டையும் பிண்ணாக்கும் தவிர வேறு எந்தச் சுவையும் அறியாத மாடுகளாக நுகர்வோரெல்லாம் மாற்றப்பட்டுவிடுவார்கள்.