- எஸ்.ஏ.நாசரின் இந்தக் கவிதை வரிகள் உலவும் வெளிகளில்தான், அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' புத்தகம். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து, அகதியாக்கப்பட்ட 25 வயது ஈழத் தமிழ் இளைஞன் த.அகிலன், தன்னைக் கடந்துபோன, தான் கடந்துவந்த மரணங்களின் வாசனையைப் புத்தகமாக்கி இருக்கிறார். ''அப்போது எங்கள் ஊரைச் சுற்றி இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்தது. மாலை 6 மணிக்குள் நாங்கள் வீடடைந்துவிட வேண்டும். அதன் பிறகு யாரும் உள்ளே நுழையவோ, வெளியேறவோ முடியாது. இரவு தொடங்கியிருந்த ஒரு நாளில் என் அப்பாவைப் பாம்பு கடித்து விட்டது. நுரை பொங்கும் வாயுடன் கிடந்த அவரைக் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால், அமைதிப்படையின் ராணுவம் என் தந்தையின் துடிக்கும் உடம்பு பார்த்தும் மனம் இரங்கவில்லை. ஊர் கூடி நிற்க, இந்திய ஆர்மியின் கண்கள் பார்த்திருக்க, அவரது உயிர் மெதுவாகக் காற்றில் கரைந்தது. என் அம்மம்மாவுக்கு திருநகரில் 'கோயிலாச்சி' என்று பெயர். அந்த ஊரின் அம்மன் கோயிலைக் கட்டியவளும், அதை ஊராக மாற்றியவளும் அவள்தான். கோயிலையும் ஊரையும் மனித உயிர்களுக்கும் அதிகமாக அவள் நேசித்தாள். யுத்தம் யாரைவிட்டது? அம்மம்மாவின் கதறல் காற்றைக் கிழிக்க, அவளையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ஸ்கந்தபுரத்துக்குப் புலம் பெயர்ந்தோம். ஏழு வருடங்கள் கழித்து 'பொடியள் மறுபடியும் ஆனையிறவைப் பிடிச்சுட்டாங்களாம்' என்று செய்தி வந்ததும் அம்மம்மாவுக்கு அத்தனை மகிழ்ச்சி. கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிறகு, சைக்கிளில் வைத்து அம்மம்மாவை திருநகருக்கு அழைத்துக்கொண்டு போனேன். கொடூரமாகச் சிதைக்கப்பட்ட சுடுகாட்டைப் போல ஊர் சிதிலமடைந்துகிடந்தது. எங்கள் வீடு இருந்த இடத்தைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அம்மம்மாவின் கண்களுக்கு அம்மன் கோயில் தெரிந்தது. 'வேசை, இந்தக் கோலத்துலயாடி உன்னை நான் பார்க்க வேணும்?' என்று மண் வாரித் தூற்றி கோயிலின் உடைந்த சுவரில் மோதி கீழே விழுந்தாள். மூர்ச்சையாகிச் சாய்ந்தவளின் கடைசி மூச்சு என் கரங்களில் பிரிந்தது. காயத்ரி... என் அன்பான தோழி! குண்டுகள் எங்களை மணியங்குளத்துக்குத் துரத்தியபோதுதான் அவளைச் சந்தித்தேன். வார்த்தைகளுக்கு அப்பா லான நேசம் இருவரையும் இணைத்தது. பள்ளி இறுதி வகுப்பில் நான் பரிசு வாங்கிய கவிதைத் தாளை அவள்ஒளித்து வைத்துக்கொண்டாள். சடங்கு ஆல்பத்திலிருந்து அவளது புகைப்படத்தை நான் திருடிக்கொண்டேன். யுத்தத்தின் கொடுங்கரங்கள் என்னை அகதியாகத் தமிழகத்துக்குத் துரத்தியடித்தன. என் மீதான காயத்ரியின் அன்பை நண்பர்கள் அவ்வப்போது உறுதி செய்தனர். பின்னொரு நாளில் தொலைபேசி குறுஞ்செய்தி வந்தது. 'புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த சண்டையில் மன்னாரில் காயத்ரி பலியானாள்'. 'காயத்ரி எப்போது இயக்கத்தில் சேர்ந்தாள்?' என்ற கேள்வியை அவளது மரணம் தந்த அதிர்ச்சி தின்று செரித்தது. அவளை 'ஆம்பளை மாதிரி' என்பார்கள் ஊருக்குள். என் அத்தை மகள்களில் மூத்த மச்சாள். கந்தசாமி கோயில் திருவிழாவில் தன் காசுக்கும் சேர்த்து எனக்கு ஐஸ் பழம் வாங்கித் தரும் அன்புக்காரி. கனகாம்பிகைக் குளத்து வயல்வெளிகளுக்கு மாடு மேய்க்கப் போனால் வீரப் பழம், நாவல் பழம் பிடுங்கித் தருவாள். இயக்கத்துக்காரியான பிறகு பேச்சு குறைந்தது. நான் தமிழகம் வந்த பிறகான ஒரு தொலைபேசி விசாரிப்பில் 'அவளுக்கு எப்ப கல்யாணம்?' என்றதற்கு, 'வாற ஆவணில' என்றார்கள் வீட்டில். ஆனி மாத மழை நாளில் எனக்கு வந்த மின்னஞ்சல் இப்படி இருந்தது. 'காப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும், தொண்டமான் நகர் கிளிநொச்சியைச் சொந்த ஊராகக்கொண்ட சபாரத்தினம் பாரதி...' ஆம். என் மச்சாள் ஈழவேணியையும் போர் தின்றுவிட்டது! இது என் கதை, எங்களின் கதை. சாவே எங்களுக்கு வாழ்வானது. இந்த கால் நூற்றாண்டு கால அநீதியான போர் எம் மக்களுக்கு மரணத்தை மட்டுமே பரிசளித்திருக்கிறது. இதோ இன்று முல்லைத் தீவின் குறுகிய நிலப்பரப்புக்குள் சாவிடம் மண்டியிட்டுக்கிடக்கின்றனர் எம் மக்கள். அந்த இரண்டரை லட்சம் தமிழர்களில் என் அம்மாவும் என் தம்பியும் இருக்கிறார்கள். ஓர் இஸ்லாமியர் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்துவதைப் போல தினமும் ஐந்து முறை இணையதளத்தில் செத்தவர்களின் பெயர் பட்டியல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முன்பெல்லாம் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளில் குண்டு போட வரும்போது, அதன் சத்தம் முன்கூட்டியே கேட்கும். குண்டுகளோடு சேர்த்து, கொழும்பில் சேகரிக்கப்பட்ட மனித மலம் அடங்கிய பீப்பாய்களையும் வீசுவார்கள். பதுங்கு குழியில் இருந்தபடியே அவை கீழே வருவதைப் பார்ப்போம். ஆனால், இப்போது 'கிபீர்' எனப்படும் ஒலியைவிட அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய மிகையலி விமானங்கள் வந்து தாக்குகின்றன. இவை குண்டு போட்ட பின்புதான் 'கிபீர்' வந்திருக்கிறது என்பதே தெரியும். துவக்குப் பிடித்து களத்தில் நிற்பவன் மரணத்தை நிச்சயித்துக்கொண்டவன். யுத்த முனையில் களமாடுபவனின் உயிர் என்பதும் துப்பாக்கி குண்டு போல ஓர் ஆயுதமே. தான் ஒரு தமிழன் என்று உணர்ந்துகொள்ளக்கூடிய அளவுக்குக்கூட விவரம் இல்லாத குழந்தை களை ஏன் கொன்றழிக்கிறீர்கள்? இடைவிடா யுத்தமும், குண்டுச் சத்தமும், உறவுகளின் இழப்பும், இடப் பெயர்வும் ஈழத்துக் குழந்தைகளின் உளவியலை மீட்கவியலாப் பள்ளத்தாக்குகளில் சிதைத்து வீசிவிட்டது. விமானம் என்பது ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனம் என்று எந்த ஈழத்துக் குழந்தையும் நம்பாது. அது ஆமிக்காரர்கள் குண்டு போட வரும் ஒரு வாகனம். விமானச் சத்தம் கேட்டால், பதறியடித்துப் பதுங்கு குழி தேடி ஓடுவதே ஈழத்துக் குழந்தையின் இயல்பு. இப்போதும் நள்ளிரவின் விழிப்புகளில் சென்னை நகரின் மேலே பறக்கும் விமானங்கள் என்னை உள்ளூர நடுக்கமூட்டுகின்றன. ஈழத்தின் நிலைமை பற்றிப் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் தமிழகத் தமிழர்களிடமும் கணக்கிலடங்கா பரபரப்புகள் உலவுகின்றன. 'சிங்களர்கள் 1,000 பேர் சாவு', 'புலிகள் 200 பேர் மரணம்' என கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கும் மனநிலையோடு மரண எண்ணிக்கையும் பார்க்கப்படுகிறது. இத்தனை வருட ஈழத்தின் போர்ச் செய்திகளை ஒரு திரைப்படம் பார்க்கும் மனநிலையுடன் பார்த்த மக்கள், இப்போது பெரிய அளவிலான க்ளைமாக்ஸை எதிர்பார்க்கின்றனர். இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். கனவுகளைத் தின்று வாழ்ந்த காலமும் கற்பனைக் குதிரையில் கடந்த தொலைவுகளும் இப்போது இல்லை. நான் மிகுந்த சுயநலத்துடன் கேட்கிறேன்... யுத்த முனையில் உயிரின் வதையுடன் தவித்துக்கிடக்கும் என் தாயையும் என் தம்பியையும் காப்பாற்றுங்கள் உலகத்தீரே!'' கேட்கிறதா உங்கள் செவிகளுக்கு ஓர் ஈழத்து இளைஞனின் குரல்..? | |||
Monday, 9 March 2009
♥ : யுத்தம் யாரை விட்டது??
Subscribe to:
Posts (Atom)