மாதுளையில் இனிப்புச்சுவை, புளிப்புச்சுவை என இருவகைகள் உண்டு. இனிப்புவகை அன்றாட சாப்பிடவும், புளிப்பு மாதுளை மருத்துவப்பயன்பாட்டுக்கும் சிறப்பானவை.
பொதுவாக மாதுளையில் துவர்ப்பு மிகுந்திருப்பதால், குருதி (இரத்தம்) விருத்தியாகும். உடல் இறுக்கம் பெறும். குடல் வலிமை பெறும். சூட்டினாலும், கிருமிகளாலும் ஏற்படும் பல்வேறு கழிச்சல்களைக் கட்டுப்படுத்தும். உடல் குளிரும்.
மாதுளைப்பழச்சாற்றாலிருந்து உருவாக்கப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி குருதி விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.
தொடர்ந்து வண்டியோட்டுபவர்கள், பேருந்துகளில், தொடர்வண்டிகளில் அடிக்கடி பயணிப்பவர்கள், இரும்பைத் தொட்டு வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கிறது. தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் அழகும் பொலிவும் பெறும்.
சர்க்கரை நோயாளிகள், செரிமானத் திறன் குறைந்தவர்கள் அடிக்கடி மலம் கழிக்கும் Amebiosis நோயாளிகள். அதிக உடல் மற்றும் மன உழைப்பால், உடற்சூடும் பித்தமும் கூடி வாந்தி, விக்கல், வாய்நீர்ச்சுரப்பு, குமட்டல், மயக்கம், நெஞ்சுச்செரிவு, காதடைப்பு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், புளியேப்பம் போன்ற தொல்லைகளால் சீரழிபவர்கள் தொடர்ந்து உண்ண முழுவதும் குணமடையலாம்.
மதிய உணவுக்குப்பின் அரைப்பழம் வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து உண்டால் வரட்டிருமல் மற்றும் மலச்சிக்கல் தீரும். அடிக்கடி இதை விரும்பிச்சாப்பிடுவதால் குருதி (இரத்தம்) விருத்தியடையும், சுத்தமாகும், அறிவு வளர்ச்சி ஏற்படும். விந்தணுக்கள் கூடும். குழந்தைப்பேறு இல்லாத கணவன்-மனைவி தொடர்ந்து சாப்பிடப் பலன் கிட்டும்.
உயிர்ச்சத்தான (Vitamin) C , தாதுச்சத்துக்களான மக்னீசியம், கந்தகம் ஆகியவை இதில் அதிகம்
உள்ளன. இதன் விதை காசநோய், நீர்ச்சுருக்கு முதலானவற்றை நீக்கும். இன்னும் விந்தையான செய்தி என்னவென்றால் மாதுளை பொறாமையையும் பகையுணர்வையும் களையும் ஆற்றல் படைத்தது எனவே அதனை விரும்பி உண்ணுங்கள் என முகமது நபிகள் கூறியிருக்கிறார். எனவே பொறாமையும், பகையுணர்வும் கொண்டு நமக்கெதிரான செயல்கள் செய்யும் மனிதர்களுக்கு நிறைய மாதுளைப்பழங்கள் வாங்கிப் பரிசளித்து அவர்கள் மனதினை மாற்றலாம் என முடிவுசெய்திருப்பீர்கள்.
புதிய ஆய்வொன்றில் இந்தப்பழம் இதயத்திற்குப் பாதகம் விளைவிக்கும் LDL எனும் கொழுப்பினைக் கட்டுப்படுத்தி தமனியடைப்பு (Cardio Vascular Disease) நோயினைத் தீர்க்கிறது; இதய நரம்புகளை இறுக்கமேற்படாமல் காக்கிறது எனத் தெரியவந்துள்ளது.
பற்களைப் பாதிக்கும் பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது. நிணநீர்க் கட்டிகள் ஏற்படாமலும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகவும் உடலைப்பாதுகாக்கிறது. சிறுநீர்ப்பாதையிலுள்ள புரோசுடேட் எனும் சுரப்பியை வலுப்படுத்தி வீக்கம் வராமலும் புற்றுநோயினின்றும் காக்கிறது. சிறுநீரகத்தை வலுவாக்கும் திறனும் மாதுளைக்கு உண்டு.
மாதுளம்பூச் சாறு 2 தேக்கரண்டியுடன் கற்கண்டைப் பொடிசெய்து சேர்த்து காலை மாலை தொடர்ந்து உட்கொள்வதால் சூட்டினால் ஏற்படும் ஆசனக் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, மலம் கழித்தபின் எரிச்சல், மூலம் ஆகியவை ஒழியும். பத்துப் பூக்களை ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து பாதியாகச் சுண்டுமளவுக்குக் காய்ச்சி கற்கண்டு சேர்த்துக் குடித்தாலும் இதே பலன் கிட்டும்.
சூட்டின் காரணமாக மூக்கில் குருதி வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருகம்புல் சாறு இரு தேக்கரண்டி மாதுளைப்பூச் சாறு இரு தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர முற்றிலும் குணமடையும்.
பழம் சாப்பிட்டபின் மீந்துபோகும் தோலைக் காயவைத்து பொடியாக்கி கால்பங்கு சாதிக்காய் சேர்த்து வெண்ணை அல்லது நெய்யுடன் சேர்த்து உண்ண சீதபேதி, இரத்தபேதி எனப்படும் வியாதிகள் குணமாகும். இதன் இலை மூல நோய்மருந்துகளில் இடம்பெறுகிறது. பட்டை குடல் கிருமிகளை அகற்றும் மருந்துகளில் இடம்பெறுகிறது.
புளிப்பு மாதுளை வகை கிடைத்தால் அதனைத் தட்டிப்பிழிந்து மூன்று தேக்கரண்டி உட்கொண்டால் அனைத்து பேதிக்கழிசலும் கட்டுப்படும். புளிப்புமாதுளை கிடைக்காவிட்டால் கடைகளில் கிடைக்கும் இனிப்பு மாதுளம்பிஞ்சை அரைத்து மோருடன் சேத்தும் சாப்பிடலாம்.
முகத்திலும், தலையிலும், கண் இமைகளிலும் புழுவெட்டு ஏற்பட்டு முடிஉதிர்ந்து சொட்டையாகும். நாள்பட்டால் இதிலுள்ள நுண்புழுக்கள் பெரிதாகத் தெரியும். இதற்குப் புளிப்பு மாதுளம் பழச்சாற்றை காலை மாலை சூடுபறக்கத் தேய்த்தால் குணமாகும்.
எனவே உடலின் உள்ளுறுப்புக்களை வலுப்படுத்தி உயிர்காக்கும் மாதுளையை அனைவரும் வளர்த்துப் பயன்படுத்தி நலம் பெறுவோம்.
Thursday, 20 August 2009
உடல்வலுப்பெற மாதுளை
Re: வாழவைக்கும் வாழை
நேந்திரன் வாழை
- இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது.
- உடலுக்கு வலிமையைத் தரும்.
- குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றது.
- இரண்டாகவெட்டி நீராவியில் அவித்து உண்டால் குழந்தைகளுக்கும் செரிமானம் ஆகாதவர்களுக்கும் உணவு எளிதில் செரிக்கும்.
கேரளத்து மக்கள் இதன் அருமையை நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.
செவ்வாழை
- கண்பார்வை குறைந்து வருபவர்கள் தொடர்ந்து உண்பாராயின் 21 நாட்களுக்குப்பிறகு சிறிது சிறிதாகப் பார்வை தெளிவடையும்.
- ஆண்களுக்கு விந்தணுக்களையும் பெண்களுக்குக் கருமுட்டையையும் வலுப்படுத்தி குழந்தைப் பேறு உருவாக்கும்.
- குருதி (இரத்தம்) விருத்தியடையும்.
- கல்லீரல் வீக்கமும், சிறுநீர் வியாதிகளும் நீங்கும்.
மலைவாழை (விருப்பாச்சி)
- நீண்டநாட்கள் புளிக்காமல் இருக்கும்.
- குழந்தைகள் நல்ல வளர்ச்சியடைவார்கள்.
- மலச்சிக்கல் நீங்கும்.
பொதுவாக வாழைப்பழங்களில் பொட்டாசியம் எனும் சத்து அதிகமிருப்பதால் உடல்நலத்துக்கு இவை உகந்தவை. இதன்மூலம் பொட்டாசியம் தாதுக் குறைவால் கால்களின் ஆடுதசையில் ஏற்படும் பிடிப்பு (Cramps) முழுமையாக நீங்கும். மாரடைப்பு வராமல் தடுக்கக்கூடிவை. சோடியம் தாது குறைவாக இருப்பதால் குருதிஅழுத்தக்காரர்களும் (Blood pressure) இதனைச் சாப்பிடலாம்.
வாழையிலுள்ள Tryptophan எனும் புரதச்சத்து மனச்சோர்வினை நீக்கி மகிழ்வினைத் தருவதால் மனநோய்க்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. வாழையிலையிலேயே தொடர்ந்து உணவருந்தினால் முகம் பளபளப்பாகி அழகுபெறும், தலைமுடி நரைக்காமல் இருக்கும், நீரிழிவு நேய் அண்டாது அல்லது இருப்பவர்களுக்கு கட்டுப்படுத்தப் படும்.
வாழைப்பூவினை முறைப்படி சமைத்து உண்பதால், பித்தத்தால் வரும் வெள்ளைபோக்கு, பைத்தியம், உடற்சூடு, Amebiasis எனப்படும் அடிக்கடி மலம் கழிக்கும் நோய் ஆகியன நீங்கும். ஆண்களுக்குத் தாதுபலம் உண்டாகும். கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் உண்டாகாமல் தடுக்கும். வாழைப்பிஞ்சைச் சமைத்து உண்பதால் குருதி மூலம், அடிவயிற்றுப்புண், மூலக்கடுப்பு, அடிக்கடி சிறுநீர்கழித்தல் ஆகிய நோய்கள் குணமாகும். பத்தியமிருப்பவர்கள் உண்ணச் சிறந்த உணவாகும்.
மேலும் காயைச் சமைத்து உண்பதால், பைத்திய நோய், வாயில் நீர்வடிதல், சூட்டு இருமல், பித்த வாந்தி, வாயுக்கழிசல், உடல் வெப்பம் ஆகியவை நீங்கும். வாழைத்தண்டை வாரமிருமுறை சமைத்து உண்டு வந்தால் உடலில் கட்டிய நீரை உடைத்து வெளியேற்றும், சின்னஞ்சிறு கற்களை அகற்றி சிறுநீரகத்தையும், சிறுநீர்ப்பாதையையும் சீராக்கும். ஆனால் அதிகம் உண்பதால் எலும்புகள் வலுவிழக்கும்.
வாழைப்பட்டையை உரித்து தீயில் வாட்டி சாறுபிழிந்து தர பாம்புக்கடி நச்சு முறியும். வாழைப்பட்டையில் சுற்றிவைக்கப்பட்ட மூலிகைகள் சிலநாட்கள் வாடாமல் பசுமையாகவே இருக்கும். வாழையின் வேர்க்கிழங்கின் சாறும் நீர்பெருக்கி, கல்லுடைக்கும். சித்த மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது.