Saturday, 15 August 2009

Fwd: my kavithai--ramesh




அமிர்தம்மா
-----------------------

கருக்கல்ல எந்திரிச்சு

காப்பித்தண்ணி வச்சு

அவசரமா பல்லவெளக்கி

கடகடன்னு மருந்தா அதகுடிச்சு

அவர எழுப்பி குடுத்துட்டு

 

தண்ணிகாயவக்க தீப்பெட்டி

தேடிக்குடுத்து

அடுப்பபத்தவெச்சு ஒருசட்டி

கூழுக்காய்ச்சி அரப்படி

கொள்ளு அவிச்சு

ரெண்டுடிபன் அரிசிச்சோறு

அதுகளுக்கு மட்டும்

 

விடிசலுக்குமின்ன அருவாள

எடுத்துக்கிட்டு கரும்புவெட்ட

சத்தமில்லாம கதவ சாத்திட்டு

ஆளோட ஆளா கலந்தேன்

அதுக ரெண்டும்

தூக்கம் கெடக்கூடாதுல்ல

படிக்கற புள்ளைக பாவம்

 

சிக்கந்தர் வாத்தியார

பாறைத்தண்ணில மாடு

கழுவயில பாத்தேன்

பெரிசும் சிறுசும் அப்பிடி

படிக்குதுகலாம்

அவருதாஞ்சொன்னாறு

 

பொழுதுக்கு வீட்டுக்குப்போனா

முதல்ல அதுகளுக்கு

முச்சந்தி மண்ணடுத்து

சுத்திப்போடணும்

வாத்தியாரு சொல்லயில

பாப்பாத்தி பாருவயே செரியில்ல

 

ஆபீஸுல கைநாட்டு இனிமே

போடக்கூடதுன்னுட்டான்னு

பெரியவங்கிட்ட அவரு பேரெழுத

பழகிட்டாரு

ஆனா எனக்குதேன் 3க்கும் 8க்கும்

இன்னும் வித்தியாசம் புரியல

 

அடுத்தூரு போறதுக்கே

நாலுபேர கூப்பிடுவேன்

எட்டுமைலு சுத்தளவ

இதுவறைக்கும் தாண்டல

ரசினிகாந்து வர்ரப்ப

கேமாளிவீட்டு டீவில

பாத்ததுதான் மெட்ராசு

 

பண்னன்டாப்பு முடிச்சு

பேப்பர்ல போட்டாய்ங்க

உம்பய படத்த அப்டினு

பெரியாத்தா மவ காட்ணப்ப

எதுக்குன்னே தெரியாம அழுதேன்

 

பொழுதுக்கு அதுவந்து

'இஞ்சினிரு படிக்கனும்மா'

ஏழு மாச 'பூவாத்தா'

ஒம்போது மாச 'வெள்ளாத்தா' ன்னு

எல்லாரயும் ஏவாரி

புடிச்சுச்சிட்டு போகப்பார்த்தேன்

எட்டு நாளா சோறு எறங்கல

 

இது 'செட்டியாருது'ன்னு சொல்லி

எஞ்சின்னக்கா குடுத்த

அஞ்சுவட்டி காசயுங்குடுத்து

அனுப்பிவச்சேன் அத

அடுத்தநாளே

கண்ணுப்போட்டுட்ருந்த

'கருப்பாத்தாள'யுங்குடுத்து

சின்னக்கா கணக்க செரிசெஞ்சேன்

 

செல்லாத்தா மவ கண்ணாலத்துல

பதுவுசா கோட்டு சூட்டு போட்ட

டாக்குடரு வக்கீலெல்லாம்

இந்த பறட்டத்தலச்சிய

கையெடுத்து கும்புட்டதுல

மனசு கரஞ்சு

கண்ணுல ஒழுகுச்சு

அதுக ரெண்டையும் பெத்ததுக்கு

 

'என்ன படிச்சிருக்காக'ன்னு

மணியங் கேட்டான்

'எனக்கென்ன கண்ணு தெரியும்'ன்னு

சுருக்குப்பையிலர்ந்து

மவ குடுத்த அந்த

வெள்ள அட்டயத்தே காமிச்சேன்

அது சொல்லிருச்சு அதுக படிப்ப

என்னக்கென்ன வெளங்குதா

 

இதோ இன்னைக்கு

சிறிசு கனடாவுல

பெரிசு அமெரிக்காவுல

அதுக்கொரு புள்ளயாம்.

அந்த பிஞ்சத்தொட்டு மோந்து

பாக்க மனசுகெடந்து மருகுது

ஊருபுள்ளயெல்லாம்

'ஆத்தா'ங்கயில

அடிவயிரு உருளுது

துகளுக்கு ரெண்டு இட்டிலி

ஊட்டி ஆசய தீர்த்துக்கரேன்

 

அதுக்கு ரெண்டு

இதுக்கு ரெண்டுன்னு

அவுருகிட்ட சண்டக்கட்டி

ஆசயா வச்ச அந்த காங்கிரீட்டு

கம்பியெல்லா

தொட்டிகட்டாத என்னப்பாத்து

கெக்கேன்னு சிரிக்குது

 

மரப்பொட்டிக் குள்ளர்ந்து

தொட்டித்துணி பாடுது

"ராரி ராரி ராரரோ

ங்கண்ணே ராரி ராரி ராரரோ

மலமேல பசுமேய

ங்கண்ணே வண்ணலட்சம் கோடிபட

பொழுதோட வாபசுவே

ங்கண்ணே பொன்னுங்கிளி பால்குடிக்கோ

ராரி ராரி ……………"

 

டவுனு, கம்பியூட்டரு,

'சேட்டு', 'வீடியோ'ன்னு

என்எனத்தையோ சொல்லி

அங்கவந்தா

அந்தப்பிஞ்சிமுகம்

காட்டறங்குது

 

ஆனா இந்தப்பாவி மக

எனக்குதேன் 3க்கும் 8க்கும்

இன்னும் வித்தியாசம் புரியலயே

 

கருக்கல்ல எந்திரிச்சு

காப்பித்தண்ணி வச்சு

பல்லவெளக்கி

மருந்தா அதகுடிச்சு

அவர எழுப்பி குடுத்துட்டு

காத்திருக்கோம்

அதுகளுக்காக

-அமிர்தம்