Thursday, 28 May 2009

சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு...











தென்னிந்திய திரைப்படங்களில் வரக்கூடிய அழகிய இயற்கைச் சூழலின் பின்னணியுடன் எடுக்கப்படும் ஆற்றங்கரைக் காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்படும் கேரளத்தின் அதிரம்பள்ளியில் இருந்து தமிழ்நாட்டின் வால்பாறைக்கு செல்லக் கூடிய 38 கி.மீ. நீள காட்டுப்பாதை ஒர் அரிய, சற்றே அபாயம் நிறைந்த சுற்றுலாப் பாதையாகும்.சாலக்குடியில் இருந்து புறப்பட்டு, சாலக்குடி ஆற்றங்கரையோரமாகவேச் செல்லும் சாலையில் ஒரு 10 கி.மீ. தூரம் பயணம் செய்தால் அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சியைக் காணலாம்.அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நயாகரா நீர் வீழ்ச்சியின் சிறு வடிவம் போல இருப்பது அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியாகும்.சாலக்குடி ஆற்றில் திடீரென்று செங்குத்தாய் உள்ள நீண்ட பாறைச்சரிவில் அழகாய் விழும் அற்புத நீர்வீழ்ச்சி அதிரம்பள்ளி.இந்த நீர்வீழ்ச்சியின் மேல்பகுதிக்குச் சென்று ஓரளவிற்கு ஆற்றில் நடந்து நீர் விழும் காட்சியை பார்ப்பதற்கும் வாய்ப்புள்ளது.
webdunia photo
K. AYYANATHAN
நெடுந்துயர்ந்த மூங்கில் காடுகளுக்கிடையே நடந்து சென்று சாலக்குடி ஆற்றுக்குச் செல்வது ஓர் அருமையான அனுபவம். அதையும் மீறியது அதிரம்பள்ளியில் தண்ணீர் விழும் நெஞ்சை மிரளச் செய்யும் காட்சியைக் காண்பது.




அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் மற்றுமொரு அழகிய நீர்வீழ்ச்சி. இதன் பெயர் சேர்ப்பா. பார்ப்பதற்குத்தான் இந்த நீர்வீழ்ச்சி. அதிகமான நீர் கொட்டும்போது இந்த நீர்வீழ்ச்சிக்குள் இறங்கி குளிக்கச் செல்லக் கூடாது. ஆபத்தானது.அங்கிருந்து மேலும் 1 கி.மீ. தூரம் சென்றால்... நீங்கள் ஒரு அழகிய காட்சியைக் காணலாம். சாலக்குடி நதி ஒரு கி.மீ. அகலத்திற்கு இரண்டு மலைப்பகுதிகளுக்கு இடையே ஓடும் காட்சி அற்புதமானது. இந்த இடத்தை வாழச்சால் என்று கூறுவார்கள். வெள்ளம் இல்லாத நேரத்தில்தான் இங்கு அனுமதி கிடைக்கும்.
webdunia photo
K. AYYANATHAN
இங்கிருந்து, அங்குள்ள கேரள வன அலுவலகத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு வால்பாறை நோக்கிப் புறப்பட வேண்டும். 38 கி.மீ. தூரமுள்ள இப்பாதையில் காலைப் 10 மணிக்கு மேல் புறப்பட்டால் மதியம் 2 மணியளவிற்கு வால்பாறை சென்று சேர்ந்துவிடலாம். இந்திராகாந்தி உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதிக்குப் பெயர் இரவிக்குளம். இக்காட்டுப் பகுதிக்குள் செல்வது மிக அற்புதமான சற்றே ஆபத்து நிறைந்த அனுபவமாகும். சில நேரங்களில் யானைகளின் குறுக்கீடு இருக்கும். அப்பொழுதெல்லாம் வண்டியை நிறுத்திவிட்டு சிவனை வேண்டிக் கொண்டு சிவனே என்று உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். யானை ஐயாக்கள் சென்ற உடன்தான் பயணத்தைத் தொடர முடியும். இந்த பயணத்தின்போது மலைகளின் பக்கவாட்டில் முளைத்திருக்கும் அரிதான பல தாவரங்களையும் அவைகளில் பூத்திருக்கும் நாம் இதுவரை காணாத மலர்களையும் காணலாம்.
webdunia photo
K. AYYANATHAN
இப்பயணத்தின்போது, ஒரு இரண்டாயிரம் அடி ஆழத்தில் பரம்பிக் குளம் பரந்து கிடப்பதைக் காணலாம். அற்புதமான காட்சி அது. நின்று ரசித்து படமெடுத்துக் கொண்டு செல்லலாம்.வழியில் ஆங்காங்கு நீங்கள் சில மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பகுதிகளையும் காணலாம். அவர்களையும் பார்க்கலாம். மூன்று முதல் நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு வால்பாறையை அடைவீர்கள். அங்கிருந்து பொள்ளாச்சி நோக்கி இறங்கினால் 38 கொண்டை ஊசி வளைவுகளுடன் கொண்ட மலைப்பாதையும் ஒரு அற்புதமான சுற்றுலாப் பயண அனுபவத்தைத் தரும். பாதி வழி வந்தவுடன் பொள்ளாச்சிப் பகுதியில் ஆழியாறு அணைப் பகுதியைக் காணலாம். அதனை அடுத்த வாரம் பார்ப்போம்....