Tuesday, 29 July 2008

கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! பிடல்காஸ்ட்ரோ

உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ! 47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள்.அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போய் ஓய்ந்துவிட்டது. உடல்நிலை ஒத்துழைக்காததால், அரசு நிர்வாகத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்துள்ளார் காஸ்ட்ரோ. அமெரிக்க அரசு வெடி வெடித்துக் கொண்டாடாத குறைதான்!உலகமே கொண்டாடும் புரட்சி நாயகன் சே குவேரா, தன் தலைவனாகக் கொண்டாடிய காஸ்ட்ரோ, ஒரு 'நல்ல சர்வாதிகாரி'. பொதுவாக உலகப் புரட்சியாளர்களை வார்த்தெடுக்கும் வறுமைச் சூழல் காஸ்ட்ரோவுக்கு வாய்க்கவில்லை. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவருக்கு, வாழ்க்கையின் சோகங்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இளம்வயதில் இல்லை. பாடிஸ்டாவின் சர்வ நாச அதிகாரப் பிடியில் கியூபா சிக்கித் தவித்துக்கொண்டு இருந்த சமயத்தில், கல்லூரி மாணவர் இயக்கங்களில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார் காஸ்ட்ரோ. தன் நண்பர்கள் வறுமையில் வாடித் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டார். அதன் பிறகுதான் காஸ்ட்ரோவின் கால்கள் மெள்ள மெள்ள புரட்சிப் பாதைக்குத் திரும்பின. காஸ்ட்ரோவை பாடிஸ்டா ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும், பின்னர் அவரது வேகத்தைக் கண்டு பயந்து, அவரைத் தீர்த்துக்கட்ட முனைந்தார். உத்வேகமில்லாத ஆயிரக்கணக்கான 'ஊழியர்'களைக்கொண்ட பாடிஸ்டாவின் ராணுவத்தை, வெறும் 135 வீரியமான வீரர்களைக்கொண்டு எதிர்த்துப் போராடினார் காஸ்ட்ரோ. இடையில் ஒரு முறை கைதான காஸ்ட்ரோவுக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றக் கூண்டில், பாடிஸ்டாவுக்கு எதிராகக் கர்ஜித்தார் காஸ்ட்ரோ! அந்த உரை, நாட்டு மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற, காஸ்ட்ரோவுக்காக ஆதரவுக் குரல்கள் ஆர்ப்பரித்தன. சிறைத் தண்டனையை ரத்து செய்து, காஸ்ட்ரோவை நாடு கடத்தினார் பாடிஸ்டா. மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோவுடன் இணைந்துகொண்டார் சே குவேரா. காஸ்ட்ரோவின் கம்யூனிஸ காந்தமும், சே குவேராவின் கெரில்லா போர்த் திறமையும் ஒருவரையருவர் ஈர்த்து, இணைத்தன. 1956ல் 'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் 82 வீரர்களைத் திரட்டி, மீண்டும் பாடிஸ்டா ராணுவத்தைத் தாக்கி, ரத்த மயமாகச் சிதைத்தார் காஸ்ட்ரோ. மெதுமெதுவாக கியூபாவுக்குள் ஊடுருவி, தன்னைப் போல் புரட்சிகர எண்ணமுள்ள இளைஞர்களை இணைத்துக்கொண்டார். 1959ல் பாடிஸ்டாவிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ, அன்று முதல் இன்று வரை கியூபாவின் கிங்! கியூபாவின் வளங்களை வசப்படுத்துவதற்காக பாடிஸ்டாவை ஊட்டமுடன் ஊக்கப்படுத்திய அமெரிக்காவைக் கண்டால், ஆரம்பத்திலிருந்தே காஸ்ட்ரோவுக்கு எரிச்சல்தான். 'கரைச்சல் பண்ணுவானோ' என்ற சந்தேகத்துடனேயே தன் நே(மோ)சக் கரத்தை அமெரிக்கா நீட்ட, எதிர்பார்த்தது போலவே எடக்கு பண்ண ஆரம்பித்தார் காஸ்ட்ரோ. அள்ள அள்ளக் குறையாத கியூபாவின் சர்க்கரையை, சல்லிசு விலையில் இனி அமெரிக்கா அள்ளிச் செல்ல முடியாது என்று அறிவித்தார். பதிலுக்கு கியூபாவில் இருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அந்தச் சமயம் வலுவான வல்லரசாக இருந்த சோவியத் யூனியன், காஸ்ட்ரோவுக்குக் கை கொடுத்தது. கம்யூனிசமும் அமெரிக்க எதிர்ப்பும் இருவரையும் இணைத்தன. தனது எல்லையில் ரஷ்ய நிழல் படரவும், அரண்டு போன அமெரிக்கா, கியூபாவிடம் கொடுத்திருந்த 70 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியை ரத்து செய்தது. கியூபாவின் பொருளாதாரத்தைப் போட்டுத் தாக்குவது அமெரிக்காவின் திட்டம். ஆனால், அசரவில்லை காஸ்ட்ரோ! கியூபாவிலிருந்த அமெரிக்காவின் 850 மில்லியன் டாலர் சொத்துக்களை அரசுடைமையாக்கி, அதிர்ச்சி அணுகுண்டை வீசினார். 'போட்டுத்தள்ள வேண்டியது பொருளாதாரத்தை அல்ல; காஸ்ட்ரோவைத்தான்!' என்று அமெரிக்கா தீர்மானித்தது அப்போதுதான்! 'ஹவான்னா சுருட்டு'ப் பிரியர் காஸ்ட்ரோ. அவர் பிடிக்கும் சுருட்டில் வெடிகுண்டு செட் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. அவரைக் கொல்ல 1,400 பேருக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பிப் பார்த்தார்கள். நடக்கவில்லை. அவர் அணியும் 'ஸ்கூபா டைவிங் சூட்'டில் கொடிய நோய்க் கிருமிகளைத் தெளித்துப் பார்த்தார்கள். உணவுகளிலும், மாத்திரைகளிலும் விஷத்தைக் கலக்க முயன்றார்கள். காஸ்ட்ரோவின் தாடியில் உள்ள ஒற்றை முடியைக்கூடப் பொசுக்க முடியவில்லை அமெரிக்காவால்! காஸ்ட்ரோவின் முன்னாள் காதலியான மரிட்டா லோரென்ஸ், மீண்டும் காஸ்ட்ரோவைச் சந்தித்து, “நம் சந்தோஷத்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்'' என்றாள். அது விஷ ஐஸ்க்ரீம்! “ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நீ என்னைத் தாராளமாகச் சுட்டே கொன்றுவிடலாம்!” என்று சிரித்துக்கொண்டே அவளிடம் தன் துப்பாக்கியை நீட்டினார் காஸ்ட்ரோ. அவ்வளவுதான்... விதிர்விதிர்த்து, வெடவெடத்து காஸ்ட்ரோவின் காலடியில் சரண்டரானார் மரிட்டா. அமெரிக்காவின் இப்படியான கொலை முயற்சிகளை அடிப்படையாக வைத்து உருவான, 'காஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்' என்ற குறும்படம் படுபிரபலம். ஜனநாயகத்தை நசுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபாவில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் எல்லாம் பக்கா! காஸ்ட்ரோ பெயரில் கியூபாவில் வீதியோ, சிலையோ... ஏன், ஒரு கட்அவுட்கூடக் கிடையாது. உடல் நிலை மோசமானதால் காஸ்ட்ரோ முழு ஓய்வு எடுப்பார் என்ற செய்தி வெளியானதும், 'அந்த நல்ல கடவுளுக்கு நன்றி! விரைவில் அவரை உலகத்திலிருந்து நீக்கிவிடுவார்!' என்று நாகூசாமல் சொன்னார், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 'புஷ் நம்பும் அதே கடவுள்தான் என்னை 638 முறையும் காப்பாற்றியிருக்கிறார் என்பதை புஷ் மறந்துவிட வேண்டாம்!' என்று பதில் சொல்லியிருக்கிறார் பிடல் காஸ்ட்ரோ!தற்போது கியூபாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆரம்ப காலம் முதல் அண்ணனுக்குத் தோள் கொடுத்த தோழன்.''82 வீரர்களோடு எனது முதல் புரட்சியை ஆரம்பித்தேன். இப்போதென்றால் எனக்கு 10 அல்லது 15 வீரர்கள் போதும்! நீங்கள் எத்தனை சின்னவர்கள் என்பதல்ல விஷயம். உங்கள் அபார நம்பிக்கையும், நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியைத்தீர்மானிக்கும்!'' இதுதான் உலகத்துக்கு காஸ்ட்ரோவின் செய்தி!நன்றி விகடன்

No comments: