Sunday, 20 July 2008
கனவு இல்லம்...கனவேவா?
'காணி நிலம் வேண்டும்..பராசக்தி காணி நிலம் வேண்டும்'னு கவி பாடிய கனவு போலாகிவிட்டது இன்றைக்குச் சென்னையில் வீடு வாங்குவது. லட்சங்களில் புரண்டு கொண்டிருந்த 'ரியல் எஸ்டேட்' வியாபாரம், இன்றைக்கு கோடிகளில் புரளுகிறது.நடுத்தர வர்க்கங்கள், கனவுலகில்தான் சென்னையில் வீடு வாங்க வேண்டும், அதுவும் கூட சென்னையின் எல்லைக்கோட்டைத்தாண்டித்தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில், நிலங்களில் விலை 100 சதவிகிதத்திற்கும் அதிகமாகியிருக்கிறது.சென்னையின் திடக்கழிவுகள் எரிக்கப்படுகின்ற பகுதியாயிருந்த கிராமமாகக் கருதப்பட்ட பெருங்குடியில், 2003-2004 வருடங்களில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) நிலம் 3 - 5 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. இப்போது பழைய மகாபலிபுரம் சாலையில் பெருகுகின்ற பல்நாட்டு கணிணி நிறுவனஙகளின் அலுவலங்களின் காரணமாய், ஒரு கிரவுண்ட் நிலம் 50-60 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது, என்றால் வளர்ச்சி விகிதத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.யுகம் யுகமாக 'code' எழுதி சம்பாதித்தால் கூட, அவ்வளவு சுலபமாய் கோடிகளில் புரள முடியாது. நாலு கிரவுண்ட் வாங்கி வைத்திருந்தீர் களென்றால், கோடு எழுதிச் சம்பாதித்ததை விட அதிகமாய்ச் சம்பாதித்து ரிடையர்மெண்ட் வாங்கி இருக்கலாம்.இந்த அளவு நிலங்களின் விலை உயர்வதற்கு பெரிதும் துணை போனது, கணிணித்துறைதான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாய் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், அது ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாமே தவிர, அதுவே முழுக்காரணமாய் இருக்கும் என்று தோன்றவில்லை.அப்போது, வீடு வாங்குவதற்கான கடனின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தமையும் ஒரு காரணம். வாடகை கொடுப்பதைவிட சற்று அதிகமாக EMI கட்டினால் போதும், என்ற வங்கிக் கடன் வாரியங்களின் விளம்பரமும் துணைபோனது. 'ரியல் எஸ்டேட்'டின் ஆரம்ப நிலை வளர்ச்சிக்கு, நியாமான காரணங்கள்தாம்.மக்களின் 'கனவு இல்லம்' ஆசை, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் மூளையை முடுக்கிவிட, ஊருக்குள் இருக்கின்ற இரண்டு/மூன்று கிரவுண்ட் நிலத்தோடு இருப்பவர்களை அணுகி, கணிசமான பணத்தையும், ஒரு ஃபிளாட்டையும் கொடுத்து, அதற்கான விலையை இதர ப்ளாட் விலையில் ஏற்ற ஆரம்பித்தனர்.இது ஒரு பக்கமிருக்க, புரோக்கர்கள் இன்னொரு பக்கம்.. யாராவது நிலம் வாங்க/விற்க வந்தால், அவர்களுக்கு கமிஷன் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றுக்கு ரெண்டாக விலை சொல்ல ஏற்றினர்.தேவைக்கு வாங்குவோர்/விற்போர் போக, வங்கிகள் டெபாசிட்களுக்கு தரும் முதலீட்டை விட, நிலத்திலான முதலீடு அதிகப் பணம் ஈட்டித்தருவது புரிய ஆரம்பிக்க, பணம் வைத்திருப்போர் (NRI உட்பட) நிலத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததும், விலை ஏற ஒரு காரணம்.இதிலும் புரோக்கர்களின் அட்டகாசம்... வீடு விற்க நினைக்கிற ஆசாமிக்கு அதிக விலை வாங்கித்தருவதாகக் கூறி, வாங்குவதற்கு ஆள் ஏற்பாடு பண்ணுவர்கள். அந்த ஆளிடம், அந்த வீடு வாங்குகிற அளவுக்கு மொத்தமாகப் பணம் இருக்காது. ஆனாலும், விற்கிற பார்ட்டியை சம்மதிக்க வைத்து சேல் அக்ரிமெண்ட் போட்டுவிடுவார்கள். வாங்கிய பார்ட்டி பணத்தை புரட்டுவதாகக் கூறி ஒரு ரெண்டு மூணு மாசம் தாமதிக்க வேண்டியது..அதற்குள் அடுத்த பார்ட்டி பிடித்து, விலையை ஏற்றி ரெண்டாவது நபருக்கும், மூணாவது நபருக்கும் அக்ரிமெண்ட் போட்டு, அதில் அடுத்த செட் கமிசன் வாங்கி, முதல் பார்ட்டியை செட்டில் பண்ணுவது....இந்தச் செயின் இப்படியே தொடர்ந்ததும் விலை உயரக்காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment