Monday, 11 August 2008

மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…

- அருட்பெருங்கோ -

மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இன்னும் இருக்கிறது. எங்களுக்கு திருமணம் முடிந்து சென்னை வந்தபிறகு நைந்து போன அந்த கருப்பு வெள்ளைப்படத்தை ஏதோ பெரிய ரகசியம் போல தயங்கி தயங்கி தான் காட்டினாள். அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? ஆனால் மனைவி இறந்து போன நேரத்தில் இதை இதைத்தான் நினைக்க வேண்டுமென மனதுக்கு ஏதேனும் சட்டம் போடப்பட்டிருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் சொன்னதைக் கேட்கிற மாதிரியான மனதா எல்லோருக்கும் வாய்த்துவிடுகிறது? நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தவளைக் கொண்டு வந்து இந்த நாற்காலியில் உட்கார வைத்ததில் இருந்து அப்படியேதான் இருக்கிறாள். அப்போது இந்த திண்ணையில் சாய்ந்ததில் இருந்து நானும் இப்படியேதான் இருக்கிறேன். மனம் மட்டும் காலத்தை வருடக்கணக்கில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது. அவள் காலடியில் அழுதுகொண்டே இருக்கிற மகள், எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அவ்வப்போது தூண்டிவிடுவதுமாயிருக்கிறாள். இரவு முழுவதும் காரோட்டி வந்து சிவந்த போன கண்களில் வழிகிற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாய்ந்து அமரிந்திருக்கும் மகனை தாங்கியபடி நிற்கிறது இந்தப் பழையத் தூண்.

இந்தத் தூண் அப்போது இன்னும் அழகாய் இருந்தது. இந்தத் திண்ணையில் விரித்திருந்த பாயில்தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் என்றால், நானும், என் குடும்பமும். அன்று இந்தத் தூண் வரைக்கும் வந்து நின்றுவிட்டு, நிமிர்ந்துகூட பார்க்காமல் மறைந்துவிட்டாள். சாதகம் எல்லாம் பொருந்தியிருந்தும் மகளைச் சென்னைக்கு அனுப்ப அவள் வீட்டில் எல்லோருக்குமே தயக்கம்தான். அவள் சொல்லுகிற போதெல்லாம் கண்டிப்பாக ஊருக்கு அழைத்து வந்துவிடுவதாய் நான் வாக்குக் கொடுத்துதான் எங்கள் திருமணம் நடந்தது. சென்னை வந்து விட்ட இத்தனை வருடங்களிலும் 'எங்க மகிளிப்பட்டில…' என்று ஆரம்பித்து தினமும் பத்து முறையாவது சொல்ல, அவளுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன இந்த ஊரில். முதன்முறையாக ஊரைவிட்டு வெளியே வந்திருந்தாலும், ஒன்பதாவது வரையிலும் படித்திருந்ததால் சென்னை நாகரிகத்திற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் அவளுக்குப் பெரிய சிரமம் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இந்த ஊரை மொத்தமாய் தன்னோடு சுருட்டிக் கொண்டு வந்துவிட்டதைப் போல எப்போதும் இதனோடு நெருக்கமாகவே இருந்தாள். திருமணத்திற்குப் பிறகு என்னைப் பிரிகிற சில நாட்களும்கூட துயரமென அவள் வருந்தியபோதும், என்னோடு அவள் சென்னையில் இருந்த காலங்களை விட, அவளோடு நான் மகிளிப்பட்டியில் இருந்த காலங்களிலேயே அவள் முழுமையான மகிழ்ச்சியில் இருந்திருக்கிறாள். சென்னையிலிருந்து வரும்போது லாலாப்பேட்டையில் இறங்கும்போதே அவளிடம் தெரியும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன்.

லாலாப்பேட்டையில் இருந்து வரும் அடுத்த மினி பஸ்சின் சத்தம் கேட்கிறது. வாய்க்கால் முக்கில் இறங்கிய சொந்தங்களில் அங்கிருந்தே ஒப்பாரியை ஆரம்பித்து விட்ட ஒரு கிழவியின் குரலைக் கேட்டு, இங்கு அழுதழுது ஓய்ந்திருந்த பெண்களுக்கு மீண்டும் கேவல் ஆரம்பித்தது. அழுதுகொண்டே ஓடிவந்த பெண்களோடு இங்கிருந்த வர்களும் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பிக்க திடீரென சத்தம் அதிகமாகி, நினைவுக்குள் எதையெதையோ உடுக்கையடிக்கிறது எனக்கு. எல்லாப் பெண்களும் வட்டமாய்க் கட்டிப்பிடித்துக் கொண்டு அசைந்து அசைந்து ஒப்பாரி வைக்க, யாரும் நாற்காலியைத் தட்டி விட்டு விடக்கூடாதே என்கிற பயமெனக்கு. ஆடுகிறவர்கள் எல்லாரும் அவள் கையை இடித்து இடித்து விட அவள் கையை எடுத்து உள்ளே மடித்து வைக்கப் பார்க்கிறேன். ஆனால் அது நாற்காலியோடு கட்டப்பட்டிருக்க, அவள் கையையேப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மகன் அதனை வித்தியாசமாகப் பார்க்கிறான். அதற்குள்ளாகவே அவளைப் பிணம் என்று அவனால் உணர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது போல. என்னால் இன்னும் முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொள்ள முயன்றாலும், இது எல்லாமே கனவாக மாறி திடீரென நான் தூக்கத்தில் இருந்து விழிப்பேன்; எப்போதும் போல என் மார்பில் கை போட்டு அவள் துங்கிக்கொண்டிருப்பாள் என்றே நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றிரவு கூட என் மார்பில் கைபோட்டுக்கொண்டு தூங்கியவள்தானே இவள். திருமணத்திற்கு முன்பு நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்பட்டவள் திருமணத்திற்குப் பிறகு பல சமயங்களில் என்னையே வெட்கப்பட வைத்திருக்கிறாள். பேசும்போது கண்களைப் பார்த்து பேசுவது மட்டுமே நெருக்கமாய் இருப்பதை உணர்த்துமென்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, கைகளையோ, தோள்களையோப் பிடித்துக் கொண்டு இவள் பேசும்போது அது பொய்யென தோன்றியிருக்கிறது. தொடுதல் உணர்த்தும் அர்த்தங்கள் புரியவைத்தவள் அவள். இத்தனை வயசிலும் இரவுத் தூக்கம் ஒரே மெத்தையில் தான். கையைப் பிடித்துக் கொண்டோ, மார்பில் கைபோட்டபடியோதான் தூங்குவாள். இரண்டு பிரசவத்தின்போதும் பக்கத்திலிருக்க சொல்லி என் கைகளைத்தானே பிடித்துக் கொண்டிருந்தாள். முதல் கர்ப்பத்தின் போது என்ன குழந்தை வேண்டுமென்று அவள் கேட்டபோது, ஆண் என்று நான் சொன்னதும் ஆச்சர்யப்பட்டாள். மகன் அம்மாவிடம்தான் அன்பாயிருப்பான், மகள் தான் அப்பாவிடம் அன்பாயிருப்பாள் என்று, எனக்கு விளக்கமெல்லாம் சொன்னாள். என் மேல் பாசமாயிருக்கிற மகளை விட அவள் மேல் பாசமாயிருக்கிற மகன் தான் வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஆனால் அப்போது பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுச் சிரித்தாள். இரண்டாவது பிரசவத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தான். நேற்று நடந்தது போலிருந்தாலும் எல்லாம் முடிந்து முப்பது வருடமாகி விட்டது.


ஆண்கள் வரிசையாக வர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நான் எழுந்து நின்று இரு உள்ளங்கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். ஒவ்வொருவராக அவர்கள் கைகளினால் என் உள்ளங்கை தொட்டு என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்களாம். வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும்தான். துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களாம். அவர்களுக்கும் துக்கமாக இருக்கிறது என்று சொல்லட்டும். ஆனால் என் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதாக சொல்லுவதுதான் வேதனை. இருக்கிற துக்கத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விட முடியுமென்றால் நன்றாகத்தான் இருக்கும். முடியுமா? எல்லோரும் அங்கங்கே அமர்ந்து கொண்டபிறகு மீண்டும் திண்ணையில் சாய்கிறேன். 'என்னைய்யா அருவது வயசு ஆம்பள அழுவலாமா? சந்தோசமா பொண்டாட்டிய அனுப்பி வைப்பியா' தடி ஊன்றி வருகிற எழுபத்தைந்து வயது பெரியவர் என் தோளைப் பிடித்துக் கொண்டு சொல்லி விட்டு அமர்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்தபோது சாராயத்தைக் குடித்துவிட்டு அழுது தீர்த்தவர், இப்போது எனக்கு அறிவுரை சொல்கிறார். அவர் சாராயம் குடித்து விட்டு அழுதார். நான் சாராயம் குடிக்காமல் அழுகிறேன். ஆணென்றால் அழக் கூடாதென்று யார் சொன்னது?

ஆண் அழக்கூடாதென்று அவள் சொல்லியிருக்கிறாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் மாரடைப்பு வந்தபோது மருத்துவமனையில் அவளைத் தேற்றி விட்டு வெளியே வந்து நான் அழுததை எப்படியோ தெரிந்துகொண்டு விட்டாள். அறுவை சிகிச்சையறைக்கு அவளை உள்ளே அனுப்பும்போது பயப்படாமல் இருக்க சொல்லி நான் தேற்ற, 'நான் உள்ள போனதும் நீங்களும் இங்க அழாதீங்க. ஆம்பள அழக் கூடாது' என்று என்னைத் தேற்றி விட்டுப் போனாள். அதற்கு முன்பெல்லாம் நோயென்றா, உடல்நிலை சரியில்லையென்றோ மருத்துவமனைக்கேப் போகாதவள். எப்போதாவது இரவு நேரத்தில் தலைவலிக்கிறதென சொல்லுவாள். கொஞ்சம் சுக்கு தட்டி போட்டு சூடாக ஒரு டம்ளர் காப்பி வைத்துக் கொடுத்தால் குடித்துவிட்டு படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்து எப்போதும் போல இயங்க ஆரம்பித்துவிடுவாள். கடைசி வரைக்கும் அவளுக்காக நான் செய்த ஒரே சமையல் சுக்கு காபி மட்டும் தான். அவள் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்கு எந்த வேலையை செய்வதற்கும் அவள் என்னை அனுமதித்ததில்லை. அந்த குற்றவுணர்ச்சியில் அவளை நான் கவனித்துக்கொள்வதற்காகவேனும் தலைவலியென்று அவள் படுத்துக் கொள்ளக்கூடாதா என்று சில சமயம் யோசிப்பேன்.

நாற்காலியிலிருந்து இறக்கி நீள பெஞ்சில் அவளைப் படுக்க வைத்து விட்டார்கள். பெண்கள் எல்லாம் சேர்ந்து புடவைகளைச் சுற்றிப் பிடித்து மறைப்பு கட்ட, குளிப்பாட்டித் தயார்படுத்துகிறார்கள். வேறு புடவை உடுத்தி, பெஞ்சோடு அவளைக் கொண்டு வந்து நடு வாசலில் வைத்து சடங்குகள் துவங்குகின்றன. என்னையும் அழைக்கிறார்கள். அவள் நெற்றியில் சந்தனத்தை தடவுகையில் எனக்கு கை நடுங்குகிறது. அதற்கு மேல் முடியாமல் மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்கிறேன். எல்லா சடங்குகளையும் முடித்து அவளைத் தேரில் தூக்கி வைக்கிறார்கள். தேருக்கு முன்னால் நடந்து செல்ல நானும் எழுந்து போக வேண்டும்.

சொர்க்கத்திற்கு யார் முன்னால் செல்வதென்று ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். இந்த உலகத்தில் அவளை விட்டுத் தனியாக எனக்கு இருக்க தெரியாதாம். அதனால் நான் தான் முதலில் போக வேண்டுமென்றும், என்னை அனுப்பி வைத்து விட்டு அவள் பிறகு வர விரும்புவதாகவும் சொன்னாள். ஒருவேளை அவளை முதலில் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். 'எமன எப்படியாவது ஏமாத்திட்டு திரும்பி உங்ககிட்டயே வந்துடுவேன்ல' என்று சொல்லி சிரித்தாள்.

தேரில் படுத்துக்கொண்டு இப்போது கண்களைத் திறந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாளே இது நிஜம்தானா? என்னைத் தவிர வேறு யாரும் அவளைப் பார்க்கவில்லையா? அவள் மெதுவாக எழுகிறாள். இப்போதுதான் மற்றவர்களும் கவனிக்கிறார்கள். அழுது கொண்டிருந்த சத்தம் அப்படியே நின்று போகிறது. தேரைத் தூக்கப் போனவர்கள் அப்படி அப்படியே சிலை போல நிற்கிறார்கள். அடித்துக் கொண்டிருந்த மேள சத்தம் கூட நின்றுவிட்டது. என்னால் இன்னும் என் கண்களை நம்பவே முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தவள், கட்டப் பட்டிருந்த கைகளை விடுவித்துக் கொள்கிறாள். யாருக்குமே அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை. எல்லாருமே ஆச்சர்யத்தில் அப்படியே வாயடைத்து சிலை போல நிற்கிறார்கள். இல்லை பயமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவள் வெகு சாதாரணமாக தூங்கி எழுபவளைப் போல கட்டுகளை அவிழ்த்து விட்டு என்னை நோக்கி நடந்து வருகிறாள். எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வருகிறது. எல்லாமே கனவாகத்தான் இருக்குமோ? வீட்டிலிருக்கும் மெத்தையிலிருந்துதான் தூங்கியெழுந்து வருகிறாளா? சுற்றிலும் நன்றாக உற்றுப் பார்த்தேன். இல்லை. இல்லவே இல்லை. நேற்றிரவு மாரடைப்பு வந்து மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவள் இறந்ததும் உண்மை. இரவோடிரவாக இங்கு மகிளிப்பட்டிக்கு கொண்டு வந்ததும் உண்மை. அவளைத் தேரில் தூக்கி வைத்தபின் உயிர் பெற்று எழுந்து வந்து இதோ என் முன் எப்போதும் போல அழகாக சிரித்துக் கொண்டிருப்பதும் உண்மைதான். சொன்னது போலவே எமனை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளா? இதெல்லாம் சாத்தியமா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு அவள் திரும்பி வந்ததே போதும். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம் பேசுகிறேன். இன்னுமிந்த ஆச்சர்யத்திலிருந்து விடுபடமுடியாமல் சத்தமே இல்லாமல் வெளி வருகின்றன என் வார்த்தைகள் – 'சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டியாம்மா?'. கேட்டதும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் – 'இல்லீங்க… நீங்க தான் வந்துட்டீங்க'

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

No comments: