Wednesday, 8 October 2008

கார்த்தி ப.சிதம்பரம் இன் குமுதம்

படபடவென, அதே சமயம் தன்னம்பிக்கை துளிர்விடப் பேசுகிறார் கார்த்தி ப.சிதம்பரம். மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரத்தின் மகன். அப்பாவோடு அரசியல் மேடைகளில் தோன்றினாலும், அவ்வப்போது இன்றைய கல்வி முறை பற்றி மேடைகளில் பதிவு செய்யவும் தவறுவதில்லை. குறிப்பாக, குழந்தைக் கல்வி முறை பற்றிய அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தேவை என்கிறார்.
``நாம் குழந்தைகளை நிறைய கட்டுப்படுத்துறோம். அதுவே தப்பு. குழந்தைகளை அவங்க போக்கிலே விட்டுத் தான் வளர்க்கணும்.
இது போட்டி உலகம்தான். நான் மறுக்கல. பெத்தவங்க தங்களால் சாதிக்க முடியாததை சந்ததிகள் சாதிக்கணும்னு அவங்களை வற்புறுத்தறாங்க. இது குழந்தைகளுக்கு பெரிய அழுத்தமா மாறுது.
அடுத்து, சக மாணவர்களோடு குழந்தைகளை ஒப்பிடுதல். இது மிகவும் தவறு. ஒப்பிடுவதால் குழந்தையின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் ஆபத்துகளே அதிகம்!'' என்று ஒருவித எச்சரிக்கையுடன் சொல்லும் கார்த்தி, வீட்டுப் பாடம் எழுதச் சொல்லி குழந்தைகளை கட்டாயப்படுத்துவதையும் கடுமையாக எதிர்க்கிறார்.
``ஒரு குழந்தை ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை பள்ளிக்கூடத்தில் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே இருக்கிறது. அதன்பின்னர், எதற்கு வீட்டுப் பாடம்? வீட்டிற்கு வந்த பின்னரும் அதையே தொடர வேண்டிய அவசியம் என்ன? ஸ்கூலில் படிக்கவேண்டும். வீட்டில் பெற்றோர்களுடனும் மற்ற உறவினர்களுடனும் கலந்திருக்க வேண்டும். வீட்டிலும் படித்துக்கொண்டே இருந்தால் எப்படி? நம்ம ஊர் படிப்பில் எல்லாமே பரீட்சையை வைத்துத் தான் முடிவு செய்கிறார்கள். அதனால் குழந்தையின் இயல்பு நிலை மாறி, தூக்கத்திலும் `டீச்சர்' திட்டுவாங்களே என்கிற மனஉளைச்சலுக்குத் தள்ளப்படும். வருடம் முழுவதும் படித்துவிட்டு, முடிவில் ஒரே ஒருநாள் எழுதும் பரீட்சையின் மூலம் மட்டும் குழந்தையின் ஆளுமைத் திறனை எப்படி கணிக்க முடியும்? பரீட்சையின் போது, சொந்தமாக எந்தக் கருத்தையும் எழுதிவிட முடியாது. புத்தகத்தில் இல்லாததை எப்படி எழுதலாம் எனக் கேட்டு, மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இந்தப் பிரச்னை இல்லை.
நான் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்தபோது, இயற்பியல் பரீட்சையில் ஒரு கேள்வி. `குளிர்சாதனப் பெட்டி இல்லாத நாட்டில் மக்கள் `காமா கதிர்களை'க் கொண்டு எப்படி உணவைப் பதப்படுத்துவார்கள்?' `குளிர்சாதனப் பெட்டியைப் பற்றியே தெரியாத நாட்டில் `காமா கதிர்கள்' பற்றித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை!' என்று பதில் எழுதினேன். புத்தகத்தில் இப்படி ஒரு விடை கிடையாது. நானாகவே எழுதினேன். ஆனால் அதற்கு மதிப்பெண் கொடுத்து என்னைப் பாராட்டினார்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்.
படிப்பது, பரீட்சை எழுதுவதற்கு மட்டுமே என்கிற நமது கல்வி முறை மாறவேண்டும். எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோமோ, அதைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. `நான் சொல்வதைப் படித்தால் போதும்?' என்று ஓங்கி அடித்து உட்கார வைத்துவிடுகிறார்கள். அப்புறம் எப்படிக் கேள்விகள் பிறக்கும்?
வளர்ந்த நாடுகளில் குழந்தைகள், மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் எதையும் திணித்துவிட முடியாது. ஏன்? எதற்கு? என்கிற கேள்விகள் இல்லாமல் அங்கே ஒரு வகுப்பு கூட நிறைவடையாது!'' என சற்றே குரல் உயர்த்திச் சொல்லும் கார்த்தி, உடற்கல்வி பற்றியும் நிறையப் பேசுகிறார்.
``சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. அப்படியே விளையாடினாலும் பெற்றோரும், ஆசிரியர்களும் தடை போடறாங்க. குடும்பமாக எங்காவது போய் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் பழக்கம் இன்னிக்கு இல்ல. ஆனா குடும்பமா ஒண்ணாச் சேர்ந்து டி.வி. பார்க்கறாங்க. ஹோட்டலுக்குப் போறாங்க. விளையாடும்போது உடலும், மனமும் இலகுவடையும். சோர்வு விலகும். அடுத்து என்ன செய்யலாம்ங்கிற உத்வேகம் உண்டாகும். குழந்தைகளின் கல்விக்கு விளையாட்டுதானே அடிப்படை!'' என்கிறார்.
தந்தையின் கருத்துக்களை ஆதரிப்பதுபோல் அவரது கரங்களைப் பிடித்துக் குலுக்கும் மூன்றாவது படிக்கும் மகள் அதிதி நளினி சிதம்பரத்தை வாஞ்சையோடு அணைத்துக்கொள்கிறார் கார்த்தி!.

No comments: