Sunday, 9 November 2008

பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.

பெற்றோருடனான குழந்தையின் முரண்பாடு என்பது, பெற்றோரின் முரண்பாட்டில் இருந்து உருவாகின்றது. குழந்தை தான் விரும்பியதை சாதிக்க நினைப்பது, முரண்பட்ட பெற்றோரின் முரண்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டது. கணவன் அல்லது மனைவியின் ஒன்றுபட்ட ஒரே முடிவை எடுக்க முடியாமையே,

குழந்தைகளின் தவறான வழிகாட்டலுக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குழந்தைகள் சொல்வழி கேட்காமை, தாம் விரும்பியதற்காக அடம்பிடித்தல், அதைப் பெறுதல் என எதுவாகவும் இருக்கட்டும், கணவன் மனைவிக்கு இடையிலான வேறுபட்ட முடிவின் அடிப்படையில் தான், குழந்தைகளால் அது சாதிக்கப்படுகின்றது. இது அறிவியல் பூர்வமானதல்ல என்பது மிக முக்கியமானது. இதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

குடும்பத்தினுள் உள்ள முரண்பாட்டையே குழந்தை பயன்படுத்துகின்றது. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஒரு குழந்தை இதைப் பயன்படுத்த முடியுமா எனின், ஆம் என்பதே உண்மை. ஒரு வயது குழந்தை கூட இதை பயன்படுத்துகின்றது. இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிதானமாக அவதானமாக அணுகிப் பாருங்கள், அப்போது வெளிப்படையாகவே புரிந்து கொள்வீர்கள். கணவன் மறுக்கும் அல்லது மனைவி மறுக்கும் விடையத்தை, இதில் ஒருதரப்பு குழந்தைக்கு அதைப் பூர்த்தி செய்தால் என்ன நடக்கும்? விளைவு குழந்தையின் அதிகாரத்துக்குள் பெற்றோர் சென்றுவிடுகின்றனர். குழந்தை தான் விரும்பியதையே சாதிக்கும். குழந்தை பெற்றோரின் சொல்லைக் கேட்பதை மறுக்கின்ற பொதுவான நிலை உருவாகின்றது. ஆணும் பெண்ணும் தமது குழந்தை விடையத்தில், ஓரே விதமாக இணக்கமான ஒரே முடிவை எடுத்தல் அவசியமானது. இந்த சூழலில் தான் குழந்தை, பெற்றோரின் சொல்லைக் கேட்கும் இணக்கமான குழந்தையாக உருவாகும். சரி பிழையை விவாதிக்கும் இணக்கமான அறிவியல்பூர்வமான குடும்ப சூழல் உருவாகும். இது பொதுவாக இணக்கமாக நடப்பதில்லை. ஒரு பெண் தான் அடைய விரும்பியதை இணக்கமான வழிகளில் அடைவதில்லை. குறுக்கு வழியில்தான் அடைகின்றாள். குழந்தைகள் விடையத்தில் மட்டும் இது எப்படி சரியாக அமைந்துவிடும்.

இயல்பாகவே ஆணாதிக்க மேலாதிக்கம் பெற்றுள்ள சமூக உறவில், பெண் தனக்கு தேவையான ஒன்றை எப்படி சாதிக்க முனைகின்றாள். பெரும்பாலும் வன்முறை கொண்டது. தான் முன் கூட்டியே எடுத்த முடிவை, விவாதத்துக்கு இடமின்றி திணிக்கின்றாள். அது மொழி வன்முறை, அழுவது, கதைக்காமல் இருத்தல், பணத்தை தனியாக சேர்த்தல், என பல வழிகளில் இதை அடைகின்றாள். இப்படிதான் தான் எடுத்துவிட்ட முடிவை, அடைகின்ற வழியில் பெண்ணின் நடத்தை உள்ளது. தாய் போல் சேய் (குழந்தை) என்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் உள்ள குழந்தையும் கூட, இதே வழியைக் கையாளுகின்றது.

பொதுவாக ஆணாதிக்க மேலாதிக்கம் பெற்ற குடும்பச் சூழலில் ஆணின் முடிவு பெண்ணின் முடிவாக இருந்தது. இங்கு மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் உணர்வு சார்ந்து, ஒரு இயல்பான இணக்கம் இருந்தது. இன்று இந்த பொது இணக்கத்தை ஆணாதிக்க வரையறைக்குள் நின்றபடி, மறுத்து உருவாகும் புதிய சூழல். ஆணாதிக்கம் அங்கீகரித்து நிற்கும் போக்கு, ஜனநாயக மனப்பான்மைக்கே எதிரானது என்பதால், மாற்றுக் கருத்தை மறுக்கின்ற அதே எதிர்மனப்பாங்குடன் கூடிய அணுகுமுறை. இது தான் பெண்ணின் புதிய நிலை. அதாவது உலகமயமாதல் வீங்கி வெம்பி தள்ளும் தனிமனித உணர்வின் விம்பங்களாக பெண் பிரதிபலிகின்றாள். ஆணிடம் இருக்க கூடிய ஜனநாயக மனப்பாங்கு, பெண்ணிடம் அணுகுவதில்லை. இணக்கமற்ற விம்பங்களாக பெண் மாற்றப்படுகின்றாள். முதலாளித்துவ சூழலில் உருவாகும் பெண்ணிடம் இது குறைவாகவே காணப்படுகின்றது. முதலாளித்துவம் அல்லாத இரட்டைச் சமூகச் சூழலில் உள்ள பெண்கள், உலகமயமாதலால் கற்பழிக்கப்பட்டு சமூக இணக்கத்துக்கு எதிரானவராகவே உருவாக்கப்படுகின்றனர்.

இப்படி உருவாகும் பெண் ஆணின் மாற்றுக் கருத்தற்ற இணக்கத்தை, நிபந்தனையின்றி தரக் கோருகின்றாள். இதை அப்பெண் வன்முறை மூலம் பெற முனைகின்றாள். ஆணின் ஆணாதிக்க மேலாதிக்கத்தை அங்கீகரித்தபடி இது நடப்பது தான், இதில் உள்ள துயரம். ஆணின் மாற்றுக் கருத்தை தனக்கு எதிரானதாக கருதுகின்ற தன்மையே, பெரும்பாலான பெண்களிடம் காணப்படுகின்றது. இப்படித்தான் அனைத்துப் பிரச்சனைகளும் பெண்களால் அணுகப்படுகின்றது. பெண்ணால் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானகரமாக எடுக்கப்பட்டு, அவை மறுபரிசீலனையின்றி ஏற்கக் கோரப்படுகின்றது. இந்தத் தளத்தில், அதன் வழியில் தான் குழந்தைகளும் இணக்கமற்று வாழ்கின்றது.

இப்படி பொதுவான அணுகுமுறைகளில் உள்ள இணக்கமற்ற போக்கு, மொழி சார்ந்து பெண்ணினால் வன்முறைக்கு உள்ளாகின்றது. இதுவே உடல் சார்ந்த வன்முறையாக வளர்ச்சியுறுகின்றது. உடல் சார்ந்த வன்முறை, மொழி சாhந்த வன்முறையின் ஒரு நீட்சியாக இருக்காத போது, இந்த வன்முறை வேறுபட்டது. கணவன் மனைவிக்கு இடையிலான உரையாடல் என்பது, இயல்பாக இணக்கமாக நடக்க முடியாத சூழல் என்பது, அதன் தளத்தைப் பொறுத்ததே. மாறாக கணவன் அல்லது மனைவியின் செயல்கள் மீதான உரையாடல் வெளிப்படுத்தும் முரண்பாட்டில், எடுத்த எடுப்பிலேயே மொழி வன்முறை என்பது தவறான முடிவுகளையும் எதிர்மனப்பாங்கையும் உருவாக்குகின்றது. ஒற்றை முடிவைத் திணிக்கும் மொழி வன்முறை, தமக்கு இடையில் இணக்கம் காண்பதில் பாரிய பிரச்சனையாக மாறிவிடுகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் உள்ள இணக்கமற்ற அணுகுமுறை கொண்ட முரண்பாடு, குடும்ப உறுப்புகளிடையே நஞ்சிடுகின்றது. இந்த நஞ்சிடும் அணுகுமுறை தான், பெற்றோருக்கு கட்டுப்பட மறுக்கும் பெரும்பாலான குழந்தைகளின் உருவாக்கத்துக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அக்குழந்தைகள் தாய் தந்தையின் முரண்பாட்டில் இருந்தே, தனக்கு சாதகமான கூறைப் பயன்படுத்திக்கொள்கின்றது. இப்படி பெற்றோருடன் முரண்பாடான மற்றொரு செயலை குழந்தை தொடங்க காரணமாகின்றது. இதை அந்தப் பெற்றோர்கள் உணர்வு பூர்வமாக உணருவதில்லை. பெற்றோர் இணக்கமாக தமக்கிடையில் முடிவை எடுக்கும் போது, குழந்தை முரண்பாடாக முடிவு எடுக்கமுடியாது. இந்த எதார்த்தம் குடும்பங்களில் உணரப்படுவதில்லை.

உண்மையில் குடும்பமே கடுமையான முரண்பாட்டினுள் சிக்கியிருப்பதை, அக்குடும்பம் தானாக உணர்வு பூர்வமாக உணருவதில்லை. இப்படி மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, வாழ்வை சுமையானதாகவும், ஏன் அதுவே புதிய முரண்பாடாகின்றது. வாழ்வில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், இதன் விளைவையும் பொதுவான நச்சரிப்பு, புறுபுறுப்பு, சதா மற்றவரை குற்றம் காணுதல் அணுகுமுறைகளால் தீhக்கப்பட முடியாது. இதைவிட அன்பும் பாசமும் குறைந்தபட்ச மகிழ்ச்சியைத் தன்னும் உருவாக்கும். இதை ஒருதலைபட்சமாகத் தன்னும், குடும்பத்தின் ஒரு உறுப்பினராவது இதைத் தேர்ந்து எடுக்காத குடும்பத்தில் விளைவோ மிகக் கடுமையானது. சதா அனைத்துக்கும் சண்டை பிடிப்பதைவிட, விடையங்களை கண்டும் காணாமல் இருத்தல் கூட, குறைந்தபட்சம் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை தான். முரண்பாட்டையே வாழ்வாக கொண்ட குடும்பங்களின் நிலையென்ன?

1.மொத்தத்தில் வீட்டினுள் முழுக்குடும்பமுமே தனது மகிழ்சியை இழக்கின்றது. சதா சண்டையும் சச்சரவும் செய்கின்றதும், குற்றம் காண்பதும், குற்றம் தேடுவதுமாகி, மூஞ்சையை நீட்டிக்கொண்டு வாழ்வதுமாகி விடுகின்றது. பெருமளவிலான ஆண்கள் போதையில் திளைக்கின்ற நிலை. பொதுவாக ஆணும் பெண்ணும் தனிமை வாதத்தில் மூழ்கி குடும்பத்தின் மகிழ்ச்சியையே இல்லாததாக்குகின்றனர். தாம் ஒரு சமூகம் என்பதையே தாமாக மறுப்பதன் மூலம், எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

2.குறித்த ஆண்கள் தமது வீட்டில் இருக்கப் பயந்து, தப்பியோடுகின்றனர். பல ஆண்கள் வீட்டில் ஒரு மூலையில் அமைதியாகி விடுகின்றனார். முடிவுகளை எடுப்பதில் இருந்து தாமாகவே ஒதுங்கிவிடுகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். பல ஆண்களின் வாழ்க்கை என்பது வெளியுலகமும், நண்பர் உலகமும், மற்றொரு பெண் என்று விலகிச் செல்லுகின்றது. சொந்த வீட்டை விடவும், மற்றொரு இடம் நிம்மதியானதாக அமைதியானதாக கருதுகின்ற நிலைமை உருவாகின்றது. பலர் இப்படி வாழ்வதும், பலர் இப்படி நினைப்பதும் நிகழ்கின்றது. ஆண்கள் பலர், வீதிகளில் பல மணி நேரம் தங்கி வாழ்கின்றனர். பலர் இதனூடாக மேலும் சீரழிகின்றவராக மாறுகின்றனர். மேலும் மேலும் அதிகமாக குடிக்கின்றனர் அல்லது புதிதாக குடிக்கப் பழகுகின்றனர்.

3. அநேக வீடுகளில் உழைப்பு முழுக்க பெண்ணின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக மாறிவிடுகின்றது. ஆண் சுதந்திரமாக பணத்தை மனைவியின் அங்கீகாரமின்றி பெற முடியாத சூழலை உருவாக்குகின்றது. வன்முறை கொண்ட அதிகாரமே ஆணைக் கட்டுப்படுத்துகின்றது. இதன் விளைவு, சில ஆண்கள் பணத்தை குடும்பத்துக்கு கொடுக்காது, மூன்றாம்தர வழிகளில் செலவு செய்கின்ற அளவுக்கு சீரழிகின்றனர்.

4. குடும்பத்தினுள் பாலியல் தேவை பூர்த்தியாகாது சிதைந்து, சமூக சீரழிவுகளை உருவாக்குகின்றது. தேவைகள் பூர்த்தியாகாது, அநாகரிகமான வழிகளில் அவை நாடப்படுகின்றது. குடும்பத்தில் முரண்பாடுகள் பாலியலிலும் பிரதிபலிக்கின்றது. அவர்களின் பாலியல் தேவை வெறும் சடங்காக மாறி, அதை வெறுப்பூட்டும் கூறாக்கிவிடுகின்றது.

5. கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பரம் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்பதை, அவர்களை அறியாது மறுதலிக்கப்படுகின்றது. இதேபோல் குழந்தைகள் கூட, தாய் அல்லது தந்தையின் சொல்லைக் கேட்க மறுக்கின்ற நிலை உருவாகின்றது. வீட்டில் குழந்தைகள் சொல் கேட்பதில்லை என்றால், அல்லது எதிர்த்து கதைக்கின்றனர் என்றால் அல்லது அடம்பிடித்து நிற்கின்றனர் என்றால், ஏன் அனைத்தையும் கொண்டு உள்ளனர் என்றால், உண்மையில் தாய் தந்தைக்கிடையில் இந்த உறவு இருப்பதே காரணமாகும். இது ஏற்படுவது என்பது, குழந்தைகளின் குற்றமல்ல. தாய் தந்தைக்கு இடையில் இது போன்று உள்ள நடைமுறையில் இருந்தே, பெரும்பாலான குழந்தைகள் இப்படி உருவாகின்றனர். தாய் தந்தையின் இணக்கமற்ற அணுகுமுறைகள், குழந்தைகளின் கட்டுப்பாடற்ற வாழ்வுக்கும், சீரழிவுக்கும் தூண்டுதலாகின்றது. இப்படியான வீடுகளில் குழந்தைகள் தமக்கு இடையில் கீரியும் பாம்பும் போல் சண்டைக்குள் மூழ்கின்றனர் அல்லது தனித்தனியாக மூலையில் ஒதுங்கி அமர்ந்துவிடுகின்றனர். தாய் தந்தை என, வீட்டில் இரண்டு மூலையில் நின்று ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகம் கட்டமைப்படுகின்றது. தாய் தந்தை இயல்பாகவே குடும்ப சூழலில் கதைத்து தீர்க்க முடியாத முரண்பாட்டை, குழந்தைக்கு முன்னால் வைத்துக்கொள்வதே அடிப்படையில் தவறானது. இது புரிந்து கொள்ளப்படுவதில்லை.

6. இப்படிப்பட்ட குடும்பத்தில் வெளியுலகம் நிம்மதியானதாகவும், குடும்ப உறுப்புகள் என்பது எதிரத்தன்மை கொண்டதாக காண்பதும், குடும்ப அங்கத்தவர் இடையேயான ஒரு உணர்வாக மாறிவிடுகின்றது. வாழ்வு பற்றி விசித்திரமான அலங்கோலமான பிறழ்ற்சி உருவாகின்றது. உதாரணமாக பெரும்பாலாக வீதியில் நிற்கும் குழந்தைகள், வீட்டுக்கு வெளியில் இருப்பதை விரும்புகின்றமைக்கான காரணம், உண்மையில் வீடு நிம்மதியாகவில்லை என்பதேயாகும். குழந்தை மீது குற்றம் கண்டுபிடிப்பதும், சதா அவர்கள் திட்டித் தீர்ப்பதும், படி படி என்று சதா நச்சரிப்பதும் திட்டுவதும், சதா வீட்டு வேலை வாங்குவதும் போன்ற பல காரணங்கள், குழந்தையை வலிந்து வீட்டுக்கு வெளியே விரட்டுகின்றது. இதன் பின்தான் வீதி பல தவறான விடையத்தை, அக்குழந்தைக்கு விகாரமாகவே கற்றுக்கொடுக்கின்றது. குழந்தைகளை சதா குறை காண்பது அல்லது எதையும் கண்டுகொள்ளாது ஒதுங்கி கிடப்பது என்ற, எதிரத்தன்மை வாய்ந்த ஒரு சூனியம் உருவாகின்றது. இப்படி குடும்பங்களில் குழந்தையுடன் உரையாடல் நடப்பதில்லை. உத்தரவுகளே பெரும்பாலும் போடப்படுகின்றது அல்லது அனைத்துக்கும் பொதுமையாக தலையாட்டுவது நடக்கின்றது. உத்தரவுகளும் அதிகாரமுமற்ற குடும்ப சூழலை உருவாக்க முடியாத குடும்பங்கள் அல்லது எதற்கும் லாயக்கற்ற ஆமாச்சாமிகளாக இருத்தல், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கூட இதுவே உரையாடலாக அமைகின்றது.

இப்படி பற்பல பக்கம் உண்டு. இணக்கமான வகையில் குடும்பத்தின் சூழலை சரிசெய்தல் மிக முக்கியமானது. இருப்பதைக் கொண்டு அழகாக மகிழ்ச்சியாக வாழ்தல் அவசியமானது. குடும்பத்தின் ஒரு உறுப்பு பற்றி மறுதரப்பு இணக்கத்தை அடைய முடியாது என்று கருதினால், பிரிந்துவிடுவது சிறப்பானது. அல்லது தனது பக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கவும் சூழலை சரிசெய்யவும் தெரிந்து கொள்வது அவசியமானது. மகிழ்ச்சியற்ற சூழலை தனக்குள் கற்பித்துக் கொண்டு, யாராலும் மகிழ்ச்சியாக வாழமுடியாது. மற்றவனை திட்டுவதால் அல்லது குறை காண்பதால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மகிழ்ச்சி என்பது தான் அல்லாதவர் மகிழ்ச்சியில் பங்குகொள்வது மூலம் தான் சாத்தியம். முதலில் தனக்குள் தான் மகிழ்ச்சியாக வாழ்தல் அவசியமானது. இயலாமை, இல்லாமை என எதுவாக இருந்தாலும், மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு போராடக் கற்றுக் கொள்ளுதல் அவசியமானது. இதன் மூலம் தான், தானும் மற்றவர்களும் எந்த நிலைமையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

பி.இரயாகரன்
09.07.2007

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு

1.போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

2.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

3.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

4.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

5.கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

தொடரும்

No comments: